Showing posts with label Kuttalam. Show all posts
Showing posts with label Kuttalam. Show all posts

Sunday, July 29, 2018

எனது ஊர் – குத்தாலம் – பகுதி 2 உக்தவேதீஸ்வர ஸ்வாமி கோயில்

எனது ஊர் – குத்தாலம் – பகுதி 2
உக்தவேதீஸ்வர ஸ்வாமி கோயில்

     உக்தவேதீஸ்வரர் ஆலயம் அதாவது செந்தமிழில் சொன்னவாரறிவார் ஆலயம் காவிரி நதிக்கு மிக அருகில் உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. எனவே ஆண்டில் ஒருமுறை மாலை வேளையில் சூரிய ஒளி மூலவரான லிங்க வடிவ சொன்னவாரறிவார் மீது விழும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கிழக்கு நோக்கிய (காலை வேளையில் சூரிய ஒளி விழும்) அல்லது மேற்கு நோக்கிய கோயிலகள் (மாலை வேளையில்) ஆண்டின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இந்த சூரிய ஒளி மூலவர் மீது விழும் வகையிலேயே கட்டப்பட்டிருக்கின்றன.

கோயிலின் அமைப்பு

     கோயிலுக்கு எதிரில் உள்ள சன்னதித்தெரு, குத்தாலம் பந்தநல்லூர் சாலையில் இணைகிறது. கோயிலுக்கு வடதிசையில் சர்வமானிய அக்ரஹாரம், மேற்கில் மேலவீதி, தெற்கில் தெற்குவீதி ஆகியவை உள்ளன. ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. கோயிலின் எட்டு திசையிலும் விநாயகர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ள. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாள் சந்நிதிக்கு நேரெதிரில் கோயிலின் தெற்கு வாசல் உள்ளது. தெற்குவீதியில் உள்ள கணபதி நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மேற்கு வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்து துணைவந்த விநாயகரை வணங்கியபின்னர் தெற்கு வாயிலின் வழியே பள்ளிக்குச் செல்வர்.

     இறைவன் சொன்னவாரறிவார் லிங்க வடிவில் அமர்ந்துள்ள சந்நிதியின் உட்பிரகாரத்தில் வலப்பக்கத்தில் வலஞ்சுழி விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த சந்நிதிக்கு எதிரில் உள்ள கருங்கல் தூணொன்றில் சிறிய விநாகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. தூணில் உள்ள இந்த விநாயகர் பற்றியும் சுவையான கதைகள் உண்டு. தேர்வு எழுதிய மாணவர்கள் தூணில் செதுக்கப்பட்டுள்ள இந்த விநாயகரின் அடிப்பீடத்தில் தங்களின் இரண்டு கட்டைவிரல்களையும் வைத்து அழுத்தினால், அவை தானகவே வந்து சேர்ந்துகொண்டால், தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்பது நம்பிக்கை.  

     இடப்பக்கத்தில் நடராஜர் சந்நிதியும் மகாலட்சுமி சந்நிதியும் அமைந்துள்ளன அதனையடுத்து மாலையார்த்த விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இறைவனுக்கும் இறைவிக்கும் இந்த விநாயகர் மாலை வரவழைத்துக் கொடுதத்தாக ஐதீகம். பிரகாரத்தின் வடகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. 1980களில் நவக்கிரகங்கள் இருக்கவில்லை. இவை பின்னர் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடுத்து வருவது மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் ஆவார். அக்கம்பக்கம் அமைந்துள்ள கோயில்களிலெல்லாம் காணப்படாத ருமையான கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். இதனையடுத்து தக்‌ஷிணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது.

காசிக்குச் சமமான தலம் - உருத்திரசன்மன் கதை

     சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன. இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். இந்தச் சுதை சிற்பங்களில் ஒரு பெரிய பாம்பு மற்றும் பாம்பாட்டியின் சிற்பம் அழகானது. இது இக்கோயிலோடு தொடர்புடைய கதையொன்றினைக் குறிப்பதாகும். உருத்திரசன்மன் என்பவன் முக்திபெற காசிக்கு யாத்திரை சென்றான். இத்தலமும் காசிக்குச் சமம் என்பதை உணர்த்த சிவபெருமான், குண்டோதரனை அழைத்து அவனை பாம்பு உருவெடுத்து உருத்திரசன்மனை காசிக்குச் செல்லவிடாமல் தடுக்க உத்தரவிட்டார். குண்டோதரன் பாம்பு வடிவத்தில் உருத்திரசன்மனைத் தடுக்க, அவன் கருட மந்திரத்தை ஜபிக்க, பாம்பு மயங்கி விழுந்துவிடுகிறது. அப்போது இறைவன் பாம்பாட்டி வடிவத்தில் வந்து பாம்பைக் காப்பாற்றுகிறார். உருத்திரசன்மன், வந்திருப்பது சிவபெருமான் என்பதனை உணர, அப்போது இறைவன் இத்தலமும் காசிக்கு இணையான தலம் என்பதை உணர்த்துகிறார்.

     அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

கார்த்திகை கடை ஞாயிற்றின் பெருமை

     வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் ஒளி வழங்க முடியாமல் போனது. இதனையடுத்து தான் இழந்த சக்தியையும் சிவபெருமானின் அருளையும் பெற குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனித நீராடி, தவமிருந்து வித்துன்மாலியிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்றான். அவ்வாறு துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு எனக் கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றிக்கிழமை ஸ்ரீ அரும்பன்னவன்னமுலை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓங்காளீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ மன்மதீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாளும் தங்கள் தங்கள் ஆலயத்திலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். பின்பு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழா இது.

     சொன்னவாரறிவார் சந்நிதியின் மைய மண்டபத்தில் கற்கூரை வேயப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கற்கூரையின் கிடைமட்டத் தூண்களில் சுந்தரரின் திருத்துருத்தி-திருவேள்விக்குடிப் பதிகம் வண்ணக்கலவையால் எழுதப்பட்டுள்ளது. இக்கோயொல் தருமபுர ஆதீனத்தின் கீழ் வரும் கோயிலாகும். எனவே தினமும் காலையும் மாலையும் பூஜையின்போது தேவாரப் பாடல்களைப் பாட ஒரு ஓதுவார் இருப்பதுண்டு. கோயிலுக்கென ஓர் நந்தவனமும் உள்ளது.

     மனம் விரும்பியவரை பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்ய விரும்புவர்கள் வந்து வழிபடவேண்டிய தலம் இது. தோல் வியாதி உள்ளவர்கள் வந்து வணங்கினால் சுந்தரருக்கு அருளியதுபோல இறைவன் அருளைப் பொழிந்து அவர்கள் நோயைப் போக்குவார் என்பது ஐதீகம். தொழில் போட்டியில் வெற்றிபெற கடை ஞாயிறு தீர்த்தவாரியில் கலந்துகொண்டு இறவனை வணங்கி அவனருளைப் பெறலாம். புத்திர பாக்கியம் பெற இத்தலத்தின் அரும்பன்னவன்ன முலையம்மனை வழிபடவேண்டும்

Saturday, July 28, 2018

எனது ஊர் – குத்தாலம்


எனது ஊர் – குத்தாலம்

     என் பெயர் கு.வை. பாலசுப்ரமணியன். குத்தாலம் வைத்தீஸ்வரன் பாலசுப்ரமணியன். குத்தாலம் எங்களது ஊர். குத்தாலத்தில் 1975 செப்டம்பர் முதல் 1981 மே மாதம் வரை அந்த ஊரில் வாழ்ந்தேன். 1981 ஜூன் முதல் 1992 பிப்ரவரி வரை அந்த ஊரோடு நெருங்கிய தொடர்பு இருந்தது. அதன் பின்னர் நான் சென்னை வாசியாகிவிட்டேன். இருந்தாலும் குத்தாலத்தோடு என் தொடர்பு மறக்கமுடியாதது.

     குத்தாலம், மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையே உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர், கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை-கும்பகோணம்-தஞ்சாவூர்-திருச்சி இரயில் பாதையில் குத்தாலத்தில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. மயிலடுதுறையிலிருந்து குத்தாலத்திற்கு நேரடி பேருந்து சேவையும் குத்தாலம் வழியே கும்பகோணம் செல்லும் பேருந்து சேவையும் உள்ளன. அருகாமையில் உள்ள விமானநிலையம் திருச்சி விமானநிலையமாகும்.

     குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பதினோறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தியோறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குத்தாலத்தில் இயங்குகிறது. மஞ்சளாறு, அஞ்சலாறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. ஊரின் ஒரு ஓரத்தில் காவிரியாறு ஓடுகிறது.

     மயிலாடுதுரையிலிருந்து இரயில் பாதையும் சாலையும் அருகருகே செல்கின்றன. 1980களின் வாக்கில் மயிலாடுதுறையிலிருந்து இரயிலில் செல்லும்போது மல்லியம், தேரெழுந்தூர் ரோடு, ஆகிய இரண்டு இரயில்நிலையங்களுக்கு தாண்டி குத்தாலம் வரும். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் காவிரி நகர் (இங்கே காவிரி ஆறு பழங்காவிரி, காவிரி என இரண்டாகப் பிரிகிறது), சித்தர்காடு, மூவலூர், மல்லியம், அரையபுரம், தேரெழுந்தூர் சாலைப் பிரிவு தாண்டி குத்தாலத்தில் பேருந்துகள் நுழையும். குத்தாலம் பேருந்து நிலையம் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.

     முக்கிய பேருந்து நிறுத்தம் குத்தாலத்தின் கடைவீதியிலேயே உள்ளது. அங்கேயே அரசு மருத்தவமனை, கால்நடை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல்நிலையம், அஞ்சல்நிலையம், அரசு நூலகம், அரசு பள்ளிகள் அனைத்தும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மணிசங்கர் அய்யர் அவர்கள் முயற்சியால் உருவான எல்.பி.ஜி வாயுவை சிலிண்டரில் அடைக்கும் பாட்டிலிங் ப்ளாண்ட் ஒன்றினைத் தாண்டித்தான் குத்தாலத்திற்குள் நுழையவேண்டும்.  

     குத்தாலத்தில்  உக்தவேதீஸ்வர ஸ்வாமி கோயில், ஓங்காளீஸ்வரர் கோயில் ஆதிகேசவப் பெருமாள் கோயில், மன்மதீச்வரர் கோயில், மாரியம்மன் கோயில், பழனியாண்டவர் கோயில், ஏராளமான விநாயகர் கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு அன்று திருவிழா நடைபெறும். இந்த எல்லாக் கோயில்களிலிருந்தும் ஸ்வாமி புறப்பாடு இருக்கும். பகல் பன்னிரண்டு மணியில் எல்லா கடவுள்களும் வழங்கும் தீர்த்தவாரி காவிரியாற்றில் நடைபெறும். சைவ சமயக் குரவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். இத்தலம் திருத்துருத்தி எனக் குறிக்கப்படுகிறது.

உக்தவேதீஸ்வர ஸ்வாமி ஆலயம்

     இது ஒரு சிவஸ்தலம். இதன் பெயர் திருத்துருத்தி ஆகும். தற்போது குத்தாலம் என்று வழங்கப்படுகிறது. இறைவன் பெயர் உக்தவேதீஸ்வரர் அல்லது சொன்னவாறு அறிவார் ஆகும். இறைவி பெயர் அரும்பன்ன வன்னமுலையாள் அல்லது பரிமள சுகந்த நாயகி. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன. இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

”சொன்னவாரறிவார்” பெயர்க் காரணம்

     திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில், இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று ஆற்றின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

குத்தாலம் பெயர்க் காரணம்

     இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற ஒரு வகை ஆத்தி மரம். அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளியபோது அம்மரம் குடையாக வந்தது. திருக்கோயிலின் வெளியே இருக்கும் அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் திருத்துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் 3-வது பாடலில்

பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே

என்று குறிப்பிடுவதால் இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

குத்தாலமும் திருவேள்விக்குடியும்
     சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். அப்போது தான் திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து இப்பதிகத்தைப் பாடினார். திருவேள்விக்குடி குத்தாலத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கல்லணை பூம்புகார் சாலையில் உள்ளது.