எனது
ஊர் – குத்தாலம்
என் பெயர் கு.வை.
பாலசுப்ரமணியன். குத்தாலம் வைத்தீஸ்வரன் பாலசுப்ரமணியன்.
குத்தாலம் எங்களது ஊர். குத்தாலத்தில் 1975 செப்டம்பர் முதல் 1981 மே மாதம் வரை அந்த
ஊரில் வாழ்ந்தேன். 1981 ஜூன் முதல் 1992 பிப்ரவரி வரை அந்த ஊரோடு நெருங்கிய தொடர்பு
இருந்தது. அதன் பின்னர் நான் சென்னை வாசியாகிவிட்டேன். இருந்தாலும் குத்தாலத்தோடு என்
தொடர்பு மறக்கமுடியாதது.
குத்தாலம், மயிலாடுதுறைக்கும்
கும்பகோணத்திற்கும் இடையே உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர், கும்பகோணத்திலிருந்து
சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை-கும்பகோணம்-தஞ்சாவூர்-திருச்சி
இரயில் பாதையில் குத்தாலத்தில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. மயிலடுதுறையிலிருந்து குத்தாலத்திற்கு
நேரடி பேருந்து சேவையும் குத்தாலம் வழியே கும்பகோணம் செல்லும் பேருந்து சேவையும் உள்ளன.
அருகாமையில் உள்ள விமானநிலையம் திருச்சி விமானநிலையமாகும்.
குத்தாலம்
ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில்
உள்ள பதினோறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குத்தாலம்
ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தியோறு ஊராட்சி மன்றங்களை
கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குத்தாலத்தில்
இயங்குகிறது. மஞ்சளாறு, அஞ்சலாறு ஆகிய
இரு ஆறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. ஊரின் ஒரு ஓரத்தில் காவிரியாறு ஓடுகிறது.
மயிலாடுதுரையிலிருந்து
இரயில் பாதையும் சாலையும் அருகருகே செல்கின்றன. 1980களின் வாக்கில் மயிலாடுதுறையிலிருந்து
இரயிலில் செல்லும்போது மல்லியம், தேரெழுந்தூர் ரோடு,
ஆகிய இரண்டு இரயில்நிலையங்களுக்கு தாண்டி குத்தாலம் வரும். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து
பேருந்துகள் காவிரி நகர் (இங்கே காவிரி ஆறு
பழங்காவிரி, காவிரி என இரண்டாகப் பிரிகிறது), சித்தர்காடு,
மூவலூர், மல்லியம், அரையபுரம், தேரெழுந்தூர் சாலைப் பிரிவு தாண்டி குத்தாலத்தில்
பேருந்துகள் நுழையும். குத்தாலம் பேருந்து நிலையம் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே
உள்ளது.
முக்கிய பேருந்து
நிறுத்தம் குத்தாலத்தின் கடைவீதியிலேயே உள்ளது. அங்கேயே அரசு மருத்தவமனை, கால்நடை மருத்துவமனை,
சார்பதிவாளர் அலுவலகம் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல்நிலையம், அஞ்சல்நிலையம்,
அரசு நூலகம், அரசு பள்ளிகள் அனைத்தும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ளன. காங்கிரஸ்
கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மணிசங்கர் அய்யர் அவர்கள் முயற்சியால்
உருவான எல்.பி.ஜி வாயுவை சிலிண்டரில் அடைக்கும் பாட்டிலிங் ப்ளாண்ட் ஒன்றினைத் தாண்டித்தான்
குத்தாலத்திற்குள் நுழையவேண்டும்.
குத்தாலத்தில் உக்தவேதீஸ்வர ஸ்வாமி
கோயில், ஓங்காளீஸ்வரர் கோயில் ஆதிகேசவப் பெருமாள் கோயில், மன்மதீச்வரர் கோயில், மாரியம்மன்
கோயில், பழனியாண்டவர் கோயில், ஏராளமான விநாயகர் கோயில்கள் உள்ளன. கார்த்திகை
மாதம் கடைசி ஞாயிறு அன்று திருவிழா நடைபெறும். இந்த எல்லாக் கோயில்களிலிருந்தும் ஸ்வாமி
புறப்பாடு இருக்கும். பகல் பன்னிரண்டு மணியில் எல்லா கடவுள்களும் வழங்கும் தீர்த்தவாரி
காவிரியாற்றில் நடைபெறும். சைவ சமயக் குரவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும்
சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். இத்தலம் திருத்துருத்தி
எனக்
குறிக்கப்படுகிறது.
உக்தவேதீஸ்வர ஸ்வாமி ஆலயம்
இது ஒரு சிவஸ்தலம். இதன் பெயர் திருத்துருத்தி ஆகும்.
தற்போது குத்தாலம் என்று வழங்கப்படுகிறது. இறைவன்
பெயர் உக்தவேதீஸ்வரர் அல்லது சொன்னவாறு அறிவார் ஆகும். இறைவி பெயர் அரும்பன்ன வன்னமுலையாள் அல்லது பரிமள சுகந்த நாயகி. திருவேள்விக்குடி,
திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில்
உள்ளன. இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
”சொன்னவாரறிவார்”
பெயர்க் காரணம்
திருவாவடுதுறை
தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான்
காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி
காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர்
விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில், இறைவன்
விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு
தினமும் காவிரிக்குச் சென்று ஆற்றின் நடுவிலிருந்த மணல்
மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள்
இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின்
கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய்
தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க
வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று
ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி
தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து
கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.
குத்தாலம்
பெயர்க் காரணம்
இத்தலத்தின்
தலவிருட்சம் உத்தால மரம் என்ற ஒரு வகை ஆத்தி மரம். அம்பாளைத் திருமணம் செய்து
கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளியபோது அம்மரம் குடையாக வந்தது. திருக்கோயிலின் வெளியே இருக்கும் அம்மரத்தினடியில்
இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று
பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று
அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் திருத்துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள
தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் 3-வது
பாடலில்
பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல்
பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே
என்று குறிப்பிடுவதால் இவ்வூர் கி.பி.
ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும்
என்பது புலனாகிறது.
குத்தாலமும் திருவேள்விக்குடியும்
சுந்தரரும்
இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு
திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால்
இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார்.
காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன்
இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி
வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன்
உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து
எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். அப்போது தான்
திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து இப்பதிகத்தைப் பாடினார்.
திருவேள்விக்குடி குத்தாலத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கல்லணை பூம்புகார்
சாலையில் உள்ளது.
1965 முதல் 1971 வரை நானும் குத்தாலத்தில் இருந்து அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். இப்போது சென்னையில்.
ReplyDeleteஆதிகேசவப் பெருமாள் கோயில் மூலவர் மற்றும் உத்ஸவர் தாயார் பெயர் என்ன என்று அறியத்தர வேண்டுகிறேன். நன்றி
ReplyDelete