எனது
ஊர் – குத்தாலம் – பகுதி 2
உக்தவேதீஸ்வர ஸ்வாமி கோயில்
உக்தவேதீஸ்வரர் ஆலயம் அதாவது செந்தமிழில் சொன்னவாரறிவார் ஆலயம் காவிரி நதிக்கு மிக அருகில் உள்ளது.
கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. எனவே ஆண்டில் ஒருமுறை மாலை வேளையில் சூரிய ஒளி
மூலவரான லிங்க வடிவ சொன்னவாரறிவார் மீது விழும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள
பல கிழக்கு நோக்கிய (காலை வேளையில் சூரிய ஒளி விழும்) அல்லது மேற்கு நோக்கிய கோயிலகள்
(மாலை வேளையில்) ஆண்டின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இந்த சூரிய ஒளி மூலவர் மீது விழும்
வகையிலேயே கட்டப்பட்டிருக்கின்றன.
கோயிலின்
அமைப்பு
கோயிலுக்கு எதிரில்
உள்ள சன்னதித்தெரு, குத்தாலம்
பந்தநல்லூர் சாலையில் இணைகிறது. கோயிலுக்கு வடதிசையில் சர்வமானிய அக்ரஹாரம், மேற்கில் மேலவீதி,
தெற்கில் தெற்குவீதி ஆகியவை உள்ளன. ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக
விளங்குகிறது. கோயிலின் எட்டு திசையிலும் விநாயகர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள்
கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம்
உள்ளன. வலதுபுறம் தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளன.
மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த
இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப்
பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக
வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்"
என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில்
தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாள் சந்நிதிக்கு நேரெதிரில்
கோயிலின் தெற்கு வாசல் உள்ளது. தெற்குவீதியில் உள்ள கணபதி
நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மேற்கு வாசல் வழியாக கோயிலுக்குள்
நுழைந்து துணைவந்த விநாயகரை வணங்கியபின்னர் தெற்கு வாயிலின் வழியே பள்ளிக்குச் செல்வர்.
இறைவன் சொன்னவாரறிவார்
லிங்க வடிவில் அமர்ந்துள்ள சந்நிதியின் உட்பிரகாரத்தில் வலப்பக்கத்தில் வலஞ்சுழி விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த சந்நிதிக்கு
எதிரில் உள்ள கருங்கல் தூணொன்றில் சிறிய விநாகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. தூணில்
உள்ள இந்த விநாயகர் பற்றியும் சுவையான கதைகள் உண்டு. தேர்வு எழுதிய மாணவர்கள் தூணில்
செதுக்கப்பட்டுள்ள இந்த விநாயகரின் அடிப்பீடத்தில் தங்களின் இரண்டு கட்டைவிரல்களையும்
வைத்து அழுத்தினால், அவை தானகவே வந்து சேர்ந்துகொண்டால், தேர்வில் நிச்சயம் வெற்றி
பெறுவர் என்பது நம்பிக்கை.
இடப்பக்கத்தில் நடராஜர்
சந்நிதியும் மகாலட்சுமி சந்நிதியும் அமைந்துள்ளன அதனையடுத்து மாலையார்த்த விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இறைவனுக்கும்
இறைவிக்கும் இந்த விநாயகர் மாலை வரவழைத்துக் கொடுதத்தாக ஐதீகம். பிரகாரத்தின்
வடகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள்,
சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. 1980களில் நவக்கிரகங்கள்
இருக்கவில்லை. இவை பின்னர் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடுத்து வருவது மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் ஆவார். அக்கம்பக்கம் அமைந்துள்ள கோயில்களிலெல்லாம் காணப்படாத
அருமையான கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார்.
இதனையடுத்து தக்ஷிணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது.
காசிக்குச்
சமமான தலம் - உருத்திரசன்மன் கதை
சுவாமி
கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும்
காணப்படுகின்றன. இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். இந்தச் சுதை சிற்பங்களில்
ஒரு பெரிய பாம்பு மற்றும் பாம்பாட்டியின் சிற்பம் அழகானது. இது இக்கோயிலோடு தொடர்புடைய
கதையொன்றினைக் குறிப்பதாகும். உருத்திரசன்மன்
என்பவன் முக்திபெற காசிக்கு யாத்திரை சென்றான். இத்தலமும் காசிக்குச் சமம் என்பதை உணர்த்த
சிவபெருமான், குண்டோதரனை அழைத்து அவனை பாம்பு உருவெடுத்து உருத்திரசன்மனை காசிக்குச்
செல்லவிடாமல் தடுக்க உத்தரவிட்டார். குண்டோதரன் பாம்பு வடிவத்தில் உருத்திரசன்மனைத்
தடுக்க, அவன் கருட மந்திரத்தை ஜபிக்க, பாம்பு மயங்கி விழுந்துவிடுகிறது. அப்போது இறைவன்
பாம்பாட்டி வடிவத்தில் வந்து பாம்பைக் காப்பாற்றுகிறார். உருத்திரசன்மன், வந்திருப்பது
சிவபெருமான் என்பதனை உணர, அப்போது இறைவன் இத்தலமும் காசிக்கு இணையான தலம் என்பதை உணர்த்துகிறார்.
அக்னி
பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர்
ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர்
ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.
கார்த்திகை
கடை ஞாயிற்றின் பெருமை
வித்துன்மாலி என்ற அரக்கன்
சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால்
ஒளி வழங்க முடியாமல் போனது. இதனையடுத்து தான் இழந்த சக்தியையும் சிவபெருமானின்
அருளையும் பெற குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனித நீராடி, தவமிருந்து
வித்துன்மாலியிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்றான். அவ்வாறு துன்பம் நீங்கப்பெற்ற
நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு எனக் கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்
கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றிக்கிழமை ஸ்ரீ அரும்பன்னவன்னமுலை நாயகி சமேத ஸ்ரீ
உக்தவேதீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓங்காளீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ
சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ மன்மதீஸ்வர ஸ்வாமியும் ஸ்ரீ
செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாளும் தங்கள் தங்கள்
ஆலயத்திலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து
காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். பின்பு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு
காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழா
இது.
சொன்னவாரறிவார் சந்நிதியின்
மைய மண்டபத்தில் கற்கூரை வேயப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கற்கூரையின்
கிடைமட்டத் தூண்களில் சுந்தரரின் திருத்துருத்தி-திருவேள்விக்குடிப் பதிகம் வண்ணக்கலவையால்
எழுதப்பட்டுள்ளது. இக்கோயொல் தருமபுர ஆதீனத்தின் கீழ் வரும் கோயிலாகும். எனவே தினமும்
காலையும் மாலையும் பூஜையின்போது தேவாரப் பாடல்களைப் பாட ஒரு ஓதுவார் இருப்பதுண்டு.
கோயிலுக்கென ஓர் நந்தவனமும் உள்ளது.