Sunday, January 17, 2016

பேரிடர் மேலாண்மை - ஒரு சவால்

      இயற்கைப் பேரிடர்கள் இறைவனின் கோபத்தால் ஏற்படுவதாக நமது முன்னோர்கள் கருதினர். அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் ஒரு சில இயற்கைப் பேரிடர்கள் பற்றிக் கேட்கும்போது அல்லது அவை ஏற்படுத்திய சேதங்களைத் தொலைக்காட்சியில் காணும்போது இயற்கையை நாம் இன்னமும் வெல்லவில்லை என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை நகரை பாதித்த பெருவெள்ளம் இயற்கைப் பேரிடர்கள் பற்றியும் பேரிடர் மேலாண்மை பற்றியும் நம்முடைய பயத்தை அதிகரித்துள்ளது.

      இயற்கைப் பேரிடர்கள் இரு வகைப்படும். முதல்வகை மனிதச் செயல்பாடுகளால் ஏற்படுபவை. போர், உள்நாட்டுக் கலவரம், திடீர் தீ விபத்து, அணுமின்நிலயங்கள் பட்டாசு மற்றும் வேதியியற் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் முதலியனவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இரண்டாம் வகை இயற்கையாக நிகழ்பவை. பெருவெள்ளம், வறட்சி, புயல், டர்னடோ என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சூறாவளி, இடி மின்னலுடன் கூடிய கடுங்காற்று, நிலச்சரிவு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடல்கோள், கொள்ளை நோய், ஆகியன சில முக்கியமான இயற்கைப் பேரிடர்களாகும்.

      இயற்கைப் பேரிடர்களுள் சில தொடர் நிகழ்வுகளாலும் (chronic hazards) சில திடீர் நிகழ்வுகளாலும் (episodic hazards) ஏற்படுகின்றன. தொடர் வறட்சியால் நிலப்பரப்பு பாலைவனமாதல், நிலத்தின் தன்மை மாறுதல், உறைபனிப் படிவங்கள் உருகுதல் ஆகியவை தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் பேரிடர்களாகும். குறுகிய நேரத்தில் நிகழ்ந்து பெருத்த சேத்த்தை ஏற்படுத்துபவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், 2005ஆம் ஆண்டு மும்பை மாநகரைப் பாதித்த பெருவெள்ளம். 2014ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளம், அண்மையில் சென்னையில் ஏற்பட்ட (டிசம்பர் 1-2, 2015) பெருவெள்ளம் ஆகியனவற்றை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

                அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக பேரிடர்களும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இத்தகைய பேரிடர்களுக்கிடையே தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் அவசியம் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து வகையான பேரிடர்களும் திடீரென வருவதால் அதன் மூலம் உருவாகும் பொருள் மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகம். வறட்சி போன்ற மெதுவாக நிகழக்கூடிய பேரிடர்கள் தவிர பிற பேரிடர்களை முன்கூட்டி அறிவது மிக கடினம்.

பேரிடர் மேலாண்மை

                அடிக்கடி நிகழும் பேரிடர்களில் இருந்து நம்மை காக்க பேரிடர் மேலாண்மை அவசியம். இது ஒரு கூட்டு முயற்சி. பேரிடருக்கு முன், பேரிடர் தருணம் மற்றும் பேரிடருக்கு பின் என பேரிடர் மேலாண்மையை மூன்று கட்டங்களாக அணுகலாம். பேரிடர் மேலாண்மையில், பேரிடரை தடுத்தல், தயார் நிலையில் இருத்தல், துயர் துடைத்தல் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன. பேரிடருக்கு முன்பாக எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதற்கு விழிப்புணர்வும், தயார்நிலையும் அவசியம் (Emergency Preparedness). இந்த தயார்நிலை பேரிடரின் தன்மை, நிகழுமிடம், காலம் ஆகியவற்றைப் பொருத்தது. தயார்நிலையின் முக்கிய குறிக்கோள் பேரிடரினால் ஏற்படும் சேதாரத்தினை முடிந்த வரையில் குறைப்பதே.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (Disaster Management Act 2005)

                இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் 23.12.2005இல் இயற்றப்பட்டது. இச்சட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆணையம் (District Authority), உள்ளூர் ஆணையம் (Local Authority), மாநில ஆணையம் மற்றும் இந்திய அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளின் பணிகள், அதிகாரங்கள் ஆகியவற்றை வரையறுத்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவையும் இச்சட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. பேரிடருக்கான நிவாரணத்தின் வகை, தரம் அவை வழங்கப்படும் அளவு ஆகியவையும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசு மற்றும் இதர அமைப்புகள்

                தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management), பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் நிறுவப்பட்டது. மனிதவள மேம்பாடுப் பயிற்சி, ஆராய்ச்சி, கொள்கை முடிவு தயார் செய்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது இந்நிறுவனத்தின் பணியாகும். இந்நிறுவனம் முன்னதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையமாக (National Centre for Disaster Management) இந்திய பொது நிர்வாக நிலையத்தின் கீழ் (Indian Institute of Public Administration) செயல்பட்டுவந்தது. இந்நிறுவனத்தில் துணைத் தலைவர் நிலையிலான உயர் அலுவலர் மூலம் அன்றாடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் இதன் தலைவராக உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் இதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கின்றனர்.

                இந்நிறுவனம் ஐந்து பிரிவுகளாக பணிகளை மேற்கொள்கிறது. அவை
·         நிலம் சார்ந்த பிரிவு,
·         நீர் மற்றும் காலநிலை தொடர்பான பிரிவு,
·         கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு,
·         பிரதிசெயல் (Response) பிரிவு, நிர்வாகம்
·         நிதி பிரிவு

ஆகியவையாகும். பல்வேறு மாநிலங்களும் பேரிடர் ஆபத்து நிறைந்த பகுதிகளும் இந்நிறுவனத்தின் மூலம் உரிய பயிற்சிகளையும் திட்டங்களையும் பெற்று கொள்ள இயலும். மாநில அளவில் வருவாய் துறையின் கீழ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேரிடர் தொடர்பான திட்டமிடல், நிவாரணம் மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது. மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை மையம் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். உள்ளூர் அளவில், பேரிடர் காலங்களில், உள்ளாட்சி நிர்வாகம் அதன் நிர்வாக பகுதிகளில் நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.

                தேசிய அளவில் இந்தியாவில் பேரிடர் காலத்து அவசரநிலை நிர்வகித்தலின் பொறுப்பு இந்தியாவின் தேசிய பேரழிவு நிர்வகித்தல் ஆணையத்தின் கீழ் இருக்கிறது. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தினுள் இயங்கும் அமைப்பான சர்வே ஆஃப் இந்தியாவும் அவசரநிலை நிர்வகித்தல் செயல்பாட்டுக்கு புவியியல் வல்லுநர்களின் தர்க்க ரீதியான அறிவு மற்றும் ஆய்வு நுண்திறமை ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலமாக இந்தத் துறையில் அங்கம் வகிக்கிறது. பொது/தனியார் கூட்டாக அவசரநிலை நிர்வகித்தல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (EMRI) அண்மையில் அரசாங்கம் அமைத்திருக்கிறது. இது பேரழிவுகளாக விவரிக்கப்பட்ட நிகழ்வுகளில் அவசர நிலைகளுக்கு ஏற்ப சமூகங்களின் பொதுவான பிரதிசெயலை (response action) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சில குழுக்களின் முந்தைய முயற்சிகள், முதல் பிரதிசெயல்புரிபவர்களுக்கான அவசர நிலை நிர்வகித்தல் பயிற்சியினை முன்னேற்பாடு செய்தல், ஒற்றை அவசரநிலைத் தொலைபேசி எண்ணை உருவாக்குதல் மற்றும்  பணியாளர், உபகரணம் மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கான தளங்களை நிறுவுதல் ஆகியன உள்ளடக்கியதாக இருக்கின்றன. தற்போது இது ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களில் இயங்குகிறது. இலவச தொலைபேசி எண் 108 இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

உயர் திறன் குழு (High Power Committee)

                தேசிய அளவிலும், அனைத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலும் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் மேலாண்மை திட்டம் வகுப்பதற்காக ஆகஸ்டு 1989ஆம் ஆண்டு திரு.ஜே.சி.பந்த் அவர்கள் தலைமையில், சிறந்த வல்லுநர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்திறன் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஐந்து வகை பேரிடர்கள் அடிப்படையில் பணிபுரிகிறது. அவையாவன

         i.            நீர் மற்றும் கால நிலை சார்ந்தவை (வெள்ளம், புயல், இடி, மின்னல், கடும்புயல் (Hurricane), பனிப்பொழிவு, கடல் கொந்தளிப்பு, ஆலங்கட்டி புயல் (Hailstorm), வறட்சி)
        ii.            நிலம் மற்றும் மண் சார்ந்தவை (மண் சரிவு, நில நடுக்கம், தீ, அணை உடைப்பு மற்றும் வெடிப்பு)
      iii.            உயிரியல் சார்ந்தவை (நோய் பரவல், கால்நடை நோய் பரவல், உணவு விஷமாதல், பூச்சிகள் தொல்லை)
      iv.            வேதியியல்/அணுக்கள் தொடர்புடையவை (அணுக்கதிர், தொழிற்சாலை, வாயுக் கசிவு)
        v.            விபத்து சார்ந்தவை (காட்டுத் தீ, எண்ணெய் கசிவு, கட்டிடம் இடிதல், கூட்ட நெரிசல் வெடிவிபத்து, மின்கசிவு, சாலை விபத்துகள்)

                உயர் திறன் குழு பேரிடர் மேலாண்மைக்கான திட்டமிடலை நான்கு நிலைகளாக வகைப்படுத்தியுள்ளது. நிலை 1: பேரிடரை எதிர்கொள்ளவும் கண்காணிக்கவும் தயார் படுத்தும் நிலை நிலை 2: மாவட்ட அளவிலேயே மேலாண்மை செய்துவிடக்கூடிய பேரிடர்கள் நிலை 3: மாநில அளவில் மேலாண்மை செய்துவிடக்கூடிய நிலையிலான பேரிடர்கள் நிலை 4: மிகக் கடுமையான பேரிடர், தேசிய அளவிலான மேலாண்மை தேவைப்படும் நிலை.

                தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) சரியான முறையிலும், உரிய நேரத்திலும் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள கொள்கை முடிவுகள் எடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ் வாணையம் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்கிறது.
  • தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதலளித்தல்
  • பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்களை, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்திற்குட்பட்டு அங்கீகரித்தல்.
  • பேரிடர் புனரமைப்பிற்கான நிதி ஆதாரங்களை பரிந்துரைத்தல்
  • மாநிலப் பேரிடர் ஆணையத்தினால் விடுவிக்கப்பட வேண்டிய மாநிலத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.
  • தேசிய வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு பேரிடரால் பாதிக்கப்பட்ட அயல்நாடுகளுக்கு உதவுதல்
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்குதல்.

பேரிடர் மேலாண்மை பரிமாணங்கள்

                பேரிடர் மேலாண்மையில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை குறைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் இப்பணியை ஒரு வணிகமாக செயல்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அவசரநிலை மேலாண்மையில் பயிற்சி அளித்தலும் தனியே ஒரு வணிகமாக உருவாகியுள்ளது. Certified Emergency Manager, Certified Business Continuity Professional போன்ற சான்று பெற்ற அலுவலர்கள் பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர்களின்போது ஏற்படும் அவசர நிலையை நிர்வகிப்பதற்காகத் தேவைப்படும் பல்வேறு கருவிகள், பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதும் ஒரு தொழிலாகப் பரிமாணம் அடைந்துள்ளது. பேரிடர் தொடர்பான தொகுப்புகள், நூல்கள், கடந்தகால அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைத்து நூலகங்கள், ஆவணக்கிடங்குகள், அருங்காட்சியகம் போன்றவைகளும் வளர்ந்து வரும் பேரிடர் மேலாண்மை முறைகளுடன் ஒருங்கிணைந்துள்ளன. வணிக மயமாக்கல் பணிகள் மூலம் பேரிடர் மேலாண்மைப் பணிகள் எளிதாகவும், குறித்த காலத்தில் முடிவு பெறவும் பேரிடர் ஏற்படுத்தும் இழப்புகளை தவிர்க்கவும் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வணிக ரீதியிலான அமைப்புகளும் நிறுவனங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கின்றன.

பெருவெள்ளக் காலத்தில் பேரிடர் மேலாண்மைப் பணிகள்

                பெருவெள்ளக் காலத்தில் அரசு மற்றும் தனியார் செய்ய வேண்டிய பேரிடர் மேலாண்மைப் பணிகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு பட்டியலிடலாம்

  • வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து புயல், பெருவெள்ளம் பற்றிய எச்சரிக்கைத் தகவல் வரப்பெற்றவுடன் கிராமங்கள், நகரங்களிலுள்ள நீர்த் தேக்கங்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் ஏதேனும் உடைப்பு உள்ளதா எனக் கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • மீட்பு, பாதுகாப்பு, நிவாரணம் ஆகிய பணிகளில் தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • மீட்புப்பணியில் கிராம/நகர மக்கள் தன்னார்வத்துடன் ஈடுபட விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் மக்களிடையே பேரிடர் நேரும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.
  • மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள், போதிய வேலையாட்கள், நீச்சல் தெரிந்தோர், நீரை வெளியேற்ற மோட்டார்கள் என்று அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்.
  • மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • புயல் பாதுகாப்பு மையங்கள் தவிர, கல்விக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், மக்களை பாதுகாப்பான, இடங்களுக்குக் கொண்டு செல்ல வாகன வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதிகளை உடனுக்குடன் வழங்க பொதுக்கூட்டங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவுக் கூடங்கள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

   (   தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அனைத்துத் துறைகளின் கூட்டம் தலைமைச் செயலரின் தலைமயில் கூட்டப்படுகிறது. கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில் வைக்க வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும் இவ்வாண்டு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணங்கள் ஒன்றிரண்டல்ல. முதற்காரணம் சென்னையின் மக்கள் தொகைப் பெருக்கம். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப நகரம் திட்டமிட்ட முறையில் வளரவில்லை. குப்பைகள் பெருகிவிட்டன. குப்பைகளின் மேலாண்மையில் மக்கள், அரசு, அதிகாரிகள், அரசியல்வதிகள் அனைவரும் கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு உறைவிடம் பெரும் முயற்சியில் இயற்கை நீர்வழிகளை மறந்துவிட்டனர். நிவாரணம் வழங்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இது பாராட்டிற்குரிய செய்தி. எனினும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அரசுடன் பணியாற்ற மக்கள் தவறிவிட்டனர்.

      இனியும் இத்தகைய பேரிடர் ஏற்படாமல் இருக்க மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் ?
  • ஆறு, ஏரிப் பகுதிகளிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு கட்டிட கட்டுமானங்களைத் தவிர்க்கவேண்டும்.
  • பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்.
  • பள்ளிகள், கல்லூரிகளில் இயற்கைப் பேரிடர்கள் தோன்றுவது ஏன் என்பது பற்றி விளக்கும் வகையில் வகுப்புகள் நட்த்தப்படவேண்டும். முதற்கண் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்குப் பயிற்சிவகுப்புகள் நட்த்த வேண்டும்.
  • வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மறு ஏற்பாடு செய்து தரும் இடங்களுக்கு செல்ல அரசுக்கு ஒத்துழைக்கவெண்டும்.

மேற்சொன்னவை அனைத்தும் மீண்டும் ஒரு பேரிடர் ஏற்படாமல் இருக்க நாம் எடுத்து வைக்கும் முதலடியாக இருக்கும்.

 (அறிவியல் ஒளி சனவரி 2016 இதழில் வெளியான கட்டுரை)

Friday, July 31, 2015

எனக்குப் பிடித்த ஏ எம் ராஜா

ஏ. எம். ராஜா இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். என் வீட்டில் வானொலி வாங்கியபோது அவருடைய ”முத்தாரமே உன் ஊடல் என்னவோ” என்ற பாடலை இலங்கை வானின் வர்த்தக ஒலிபரப்பில் அடிக்கடி கேட்பதுண்டு. இசையமைபபளர் வி. குமார் அவர்கள்  ஏ.எம்.ராஜாவை அப்பாடலைப் பாடவைத்தார்.  ரங்கராட்டினம் படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய அந்தப் பாடல்  அன்று  மிகப்பெரிய ஒரு அலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. அதன் பின்னர்  புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே..., வீட்டுமாப்பிள்ளை (1973) படத்தில் வந்த ”ராசி நல்ல ராசி”, ”ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்”,  ”ரோஜா மலரைப் போல ஒரு ராஜா” போன்ற இவர் பாடிய பாடல்கள் மிக மிக இனிமையானவை. ஏமல மன்மதராஜு ராஜா, சுருக்கமாக ஏ. எம். ராஜா (ஜூலை 1ஆம் நாள், 1929இல் பிறந்தார். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.  அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி  பிரபலப் பாடகி ஜிக்கி.
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார்.  1951இல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.
இசையார்வம் கொண்ட ஏ.எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது.  எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.

1951 இல் கே.வி. மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை அவர் உருவாக்கிக் கொண்டார்.

துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல்.  மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.

அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட, நிலவும் மலரும், இதய வானின் உதய நிலவே, கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.


ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.