Friday, October 29, 2021

 

புனித் ராஜ்குமார்

 

     புனித் ராஜ்குமார் (17 March 1975 – 29 October 2021) கன்னட எம்.ஜி.ஆர் அல்லது கன்னட சூப்பர் ஸ்டாரின் மகன். ராஜ்குமாருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூன்று மகன்களும் கன்னட திரைத்துறையில் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக இருந்தனர். முதல் மகன் ஷிவா இன்னமும் நடிக்கிறார்; கன்னட திரைப்பட உலகின் ஒரு சூப்பர் ஸ்டாரக இருக்கிறார். இரண்டாவது மகன் ராகவேந்திரா சில படங்கள் நடித்தார்; பின்னர் குடும்பத்தின் பிற விஷயங்களைக் கவனிக்கிறார். 

     புனித் குழந்தைப் பிராயத்திலிருந்தே நடிகர்தான். அப்போது அவருக்கு லோஹித் என்று பெயர். அந்த சமயத்திலேயே அவர் பாடி நடிப்பார். ராஜ்குமாரும் புனித்தும் “பக்தப் பிரகலாதா” என்ற படம் நடித்தனர். அந்தப் படத்தில் இருவரும் சொந்தக் குரலில் பாடுவர்.

ஆகசவே வதனம்; சூரிய சந்த்ரவே நயனா

கிரஹ தாரைகளே அவனா ஆபரணவு

ஷிரில குடுகே நகுவு; பிரம்மாண்டாவே தனுவு;

பாதாளதல்லி இருவு ஹரி சரணவு 

 

என்று புனித் பாடுவது இன்றும் காதுகளில் ஒலிக்கிறது. 

கன்னட எம்.ஜி.ஆர் ராஜ்குமாரின் குடும்பம் வெவ்வேறு சமயங்களில் “வேடர கண்ணப்பா” என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். ராஜ்குமார் ஒருமுறை, ஷிவா ஒருமுறை. ஷிவா நடித்த வேடர கண்ணப்பா படத்தில் சிறுவயது கண்ணப்பனாக புனித் நடித்திருப்பார். ‘செலுசிவ மோடுகளு” (ஓடும் மேகங்கள் என்று பொருள்) என்ற படத்தில் ராஜ்குமார், அம்பிகா நடித்திருப்பார்கள், அந்தப் படத்தில்

 

கண்டதந்தே மாயவாதனு

நம்ம ஷிவா

கைலாச சேரிக்கொண்டனு

 

என்ற பாடலும் அந்தக் குழந்தைக் குரலில் மிக அழகாக இருக்கும். 2002இல் புனித் அப்பு என்ற படத்தில் நடித்தார். ஒரு விடலைப் பையன் வேடம். இந்தப் படம் தமிழில் ‘சிம்பு’ நடிக்க ‘தம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இதன் பின்னர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். 

     தொலைக்காட்சியில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியை இருமுறை தொகுத்து வழங்கியிருக்கிறார். மண்ணபுரம் கோல்ட், கல்யாண் ஜ்வல்லர்ஸ் போன்றவற்றிற்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். தனது 24ஆவது வயதில் சிக்மகளூரைச் சேர்ந்த அஷ்வினி ரேவந்த் என்பவரை மணந்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
 

     45 இலவச பள்ளிகள், 26 அனாதை விடுதிகள், 16 முதியோர் இல்லங்கள், 1800 மாணவர்களின் படிப்பைக் கவனிக்கிறார், கண் தானம் செய்திருக்கிறார். மிகச் சிறிய வயதில் (வயது 46) இறந்துவிட்டார். நாடு ஒரு நல்ல மனிதனை இழந்துவிட்டது. ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.