ஜூன் 21, 2020 வலய சூரிய கிரகணம்
இந்த
ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்களும் நான்கு சந்திரகிரகணங்களும் நிகழ்கின்றன. சூரிய கிரகணங்கள் ஜூன் 21ஆம் நாளும் டிசம்பர் 14ஆம் நாளும் நிகழ உள்ளன. ஜூன் 21, 2020 அன்று நிகழ உள்ள சூரிய கிரகணம் கங்கண அல்லது வலய சூரிய கிரகணமாகும்.
இது இந்தியாவில் தெரியும். டிசம்பர் 14,
2020 அன்று நிகழ உள்ளது முழுச்சூரிய கிரகணமாகும். இது இந்தியாவில் தெரியாது. இவ்வாண்டில் நிகழப்போகும்
நான்கு சந்திர கிரகணங்களும் புறநிழல் சந்திர கிரகணங்களாகும். கடைசியாக சென்ற ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஓர் கங்கண
சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
ஜூன் 21, 2020 அன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் நம்நாட்டின் சில
பகுதிகளில் வலய சூரிய கிரகணமாகவும் பெரும்பாலான பிற பகுதிகளில் பகுதி சூரிய
கிரகணகமாகவும் தெரியும். சமோலி (98.6%), டெஹராடூன் (98.6%), ஹரித்வார் (98.6%), ஜோஷிமத் (98.6%), குருக்ஷேத்திரம் (98.6%), சிர்சா (98.6%), சூரத்கர் (98.6%) ஆகிய இடங்களில் வலய சூரிய கிரகணமாகவும். பிற இடங்களில், எடுத்துக்காட்டாக அமிர்தசரஸ் (91.5%), டெல்லி (93.7%), சிம்லா (95.6%), சென்னை (34.4%) ஆகிய இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவும் இது தெரியும். அடைப்புக்குறியினுள்
சூரியன் எவ்வளவு விழுக்காடு சந்திரனின் நிழலால் மறையும் என்ற விவரம்
தரப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம்
எப்போது நிகழும்?
சந்திரன்,
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வருவதால் சூரியன் முழுவதுமாக மூடப்படும் நிகழ்வையே நாம் சூரிய
கிரகணம் என்று அழைக்கின்றோம். ஜூன் 21 அன்று சென்னையில் பகுதி சூரிய
கிரகணம் சரியாக, காலை 10.22 மணிக்குத் தொடங்கி, 11.58க்கு உச்சத்தை அடைந்து,
13.40க்கு முடிவடைகிறது. உச்சத்தை அடையும்போது
ஏறத்தாழ 34 விழுக்காடு சூரியன் சந்திரனின் நிழலால்
மறைக்கப்பட்டிருக்கும். எனவே இந்நிலையில் சென்னையில் மாலை 4.00
மணிக்கு வானம் எப்படியிருக்குமோ அதுபோன்று கிரகண நேரத்தில்
இருக்கும். இருக்கும். வலய சூரிய கிரகணம்
தெரியக்கூடிய, எடுத்துக்காட்டாக சமோலியில் காலை 10.27க்கு கிரகணம் தொடங்கி, அதிகபட்ச கிரகணம் மதியம்
12.09க்கு அடைந்து, மதியம் 01.53க்கு முடியும். அங்கு வலய சூரிய கிரகணத்தினை மதியம் 12
மணி 08 நிமிடம் 7 வினாடியிலிருந்து
12 மணி 9 நிமிடம் 1 வினாடி வரை கானலாம். அப்போது சூரியன் நெருப்பு
வளையம் போல் தோன்றும். ஆனால் வலய சூரிய கிரகணம் தெரியக்கூடிய இடங்களில்
பெரும்பாலும் வானம் மேகமூட்டமாக இருக்க வாய்ப்புள்ளது.
கிரகணம் பற்றிய சில
அடிப்படைத் தகவல்கள்
பொதுவாக
சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியதாகும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான
தூரத்தை விட, சூரியன் பூமியிலிருந்து 400 மடங்கு தொலைவில்
உள்ளது. 400 மடங்கு அளவில் குறைவாக இருக்கும் சந்திரன் எவ்வாறு முழு
சூரியனை நாளை மறைக்க முடியும்? என்று நாம் நினைக்கலாம். இதில் முக்கியமான
அறிவியல் உள்ளது, அதை நாம் அறிந்துகொண்டால் சூரியக் கிரகணத்தை நம்மால் சரியாகப்
புரிந்து கொள்ள முடியும்:
பொருள்கள்
நமக்கு நெருக்கமாக இருக்கும்போது, அவை தொலைவில் உள்ள பொருட்களை விட பெரியதாகத் தோன்றும்.
எடுத்துக்காட்டாக, இரவில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சிறு வெண்புள்ளிகள்
போல் தோற்றம் அளிக்கின்றன. ஆனால்
உண்மையில், இந்த ஒவ்வொரு நட்சத்திரமும் நமது சூரியனை விட பலமடங்கு
பெரியவை. இருப்பினும், பூமியிலிருந்து அவை வெகு தொலைவில் இருப்பதால் அவை
புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன. அதாவது சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக
இருந்தாலும், இது சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக
உள்ளது. எனவே பூமியிலிருந்து, சந்திரனும்
சூரியனும் வானத்தில் ஏறக்குறைய ஒரே அளவாகத் தான் உள்ளன.
இருப்பினும், சில நேரங்களில்
மட்டுமே சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து சூரியனின்
பார்வையை ஓரளவு தடுக்கிறது. அதுதான் பகுதி சூரிய கிரகணம். சில நேரங்களில், சூரியன், சந்திரன் மற்றும்
பூமி ஆகிய மூன்றும் மிகச் சரியாக வானில் சீரமைக்கப்பட்டிருப்பதால்,சந்திரன் சூரியனின்
முழு முகத்தையும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தடுக்கின்றது. இதனால், நாம் ஒரு முழுச்
சூரிய கிரகணத்தைக் காணமுடிகிறது.
வலய சூரிய கிரகணம் என்பது முழு சூரிய
கிரகணத்தின் ஒரு வகை என நாம் கொள்ளலாம். இதற்கு, ஏற்கனவே கூறியது போல, சூரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு
நேர் கோட்டில் வரவேண்டும். அந்நாளில், சந்திரனின்
வெளிப்படையான அளவு சூரியனின் வெளிப்படையான அளவை விட சற்றே சிறியதாக இருக்கும். இதனால் சூரியனின் மையப் பகுதி மட்டுமே
சந்திரனால் தடைபடுகிறது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட
தருணத்தில் நெருப்பு வளையமாக சூரியன் தோன்றுகிறது.
பூமி
நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகிறது. ஆண்டின் ஒரு கட்டத்தில், வழக்கமாக ஜனவரி 3 முதல் 5ஆம் தேதி வரை பூமி சூரியனுக்கு
மிக நெருக்கமாகவும், ஜூலை 3-4 தேதிகளில் சூரியநிலிருந்து தொலைதூரமாகவும் உள்ளது. எனவே
ஜனவரி 3-5 தேதிகளில் சூரியன் பெரியதாகவும், ஜூலை 3-4 தேதிகளில் சூரியன் சிறியதாகவும் தோன்றும். இதே சமயத்தில் சந்திரனும்
நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றுகிறது. ஏறத்தாழ
27.55 நாட்களுக்கு ஒரு முறை சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வருகிறது.
எனவே, சந்திரன் மாதம் ஒவ்வொரு முறை பூமிக்கு மிக நெருக்கமாகவும், பூமியை விட்டு மிக
தூரமாகவும் பயணிக்கின்றது.
சூரியன்
ஒப்பீட்டளவில் நெருக்கமாகவும் (டிசம்பர், ஜனவரி மாதத்தில்) சந்திரன்
தொலைவிலும் இருக்கும்போது முழுச் சூரிய கிரகணம் ஏற்பட்டால், சூரியனின் வெளிஅளவு
சந்திரனின் வெளிஅளவை விட பெரியதாக இருக்கும். அந்த
சூழ்நிலையில், சந்திரனால் சூரியனின் முழு முகத்தையும் மறைக்க முடியாது.
மையப் பகுதி மட்டும் சந்திரனால் மூடப்பட்டிருக்கும். அதே வேளையில், சூரியனின்
விளிம்புகள் நெருப்பு வளையமாக நிற்கும். இதுவே, வலய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
வருகின்ற
ஜூன் 21, 2020 அன்று, பூமிக்கு சூரியன் மிக நெருக்கமான இடத்தில் உள்ளது. மறுபுறம், சந்திரன் பூமியை
விட்டு தொலைதூரத்தில் உள்ளது. எனவே, நாளை சிறிய சந்திரனால்
சூரியனின் முழு வட்டத்தையும் மறைக்க முடியாது.
இந்த வலய சூரிய கிரகணத்தை நாம் ஏன் எல்லா இடங்களிலும் பார்க்க முடியாமல் போகிறது
என்ற கேள்வி நமக்குள் எழலாம்.
இதன் விளக்கத்தைப் பத்தில் காணலாம். படத்தில் அ எனக் குறிக்கப்பட்ட
புள்ளி சந்திரனையும் சூரியனையும் இணைக்கும் நேர் கோட்டில் சரியாக உள்ளது. எனவே, பூமியில் இந்த
புள்ளியில் இருப்பவர்கள் ஜீன் 21, 2020 அன்று வலய சூரிய கிரகணத்தைக் காணலாம். ஆ புள்ளியில் இதற்கு மாறாக, சந்திரனின் திசை
சூரியனின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. எனவே, சூரியனின் ஒரு
பகுதி மட்டுமே தடைபடும். எனவே, ஆ புள்ளியில்
வசிப்பவர்களுக்கு, ஒரு பகுதி சூரிய கிரகணம் மட்டுமே தெரியும். இருப்பினும், இ புள்ளியில், சந்திரனின் திசை சூரியனின் வழியில் எங்கும் இல்லை . எனவே
இந்த இடத்தில் கிரகணம் இல்லை.
ஒவ்வொரு
கிரகணத்தின் போதும் அதனை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி என்பது பற்றி
மக்களுக்கு அறிவியலாளர்கள் விளக்குகின்றனர். ஏனெனில் எந்த ஒரு
பிரகாசமான பொருளும் நம் கண்களுக்கு பாதிப்பைத் தரக்கூடியது. பிரகாசமான ஒளி நிரந்தர விழித்திரை சேதத்தை
ஏற்படுத்தி தீங்கை விளைவிக்கும். எனவே, பாதுகாப்பற்ற
முறையில் மின்னல் அல்லது வெல்டிங்கில் வரும் ஃபிளாஷ் லைட் ஆகியவற்றைப் பார்க்க
வேண்டாம் என்று நமக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. சூரிய கிரகணமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த
நாளானாலும் சூரியனை நேரடியாகப் பார்க்கக்கூடாது. சூரியனை பாதுகாப்பாக கவனிக்க இரண்டு வழிகள்
உள்ளன. கிரகணத்தைப் பார்ப்பதற்காக என்றே தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட சூரிய
வடிப்பானை (பொதுவான கறுப்புக் கண்ணாடி அல்ல) பயன்படுத்தலாம். அல்லது ஒரு
தொலைநோக்கி அல்லது பின்ஹோல் கேமராவைப் பயன்படுத்தி சூரியனை வேறு ஒரு திரையில் ப்ராஜெக்ட்
செய்து பார்க்கலாம். சூரியனை நேரடியாக
ஒரு தொலைநோக்கி அல்லது பின்ஹோல் கேமரா மூலம் பார்க்கக் கூடாது.
கிரகணம்
பற்றி குறிப்பாக சூரிய கிரகணம் பற்றி சில மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. அந்த மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் சாயமும் பூசப்படுகின்றன. கிரகணத்தின் போது சூரியன் தீங்கு விளைவிக்கும் கதிர்களை வெளியிடுகிறது.
எனவே கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது; கிரகணத்திற்கு
முன்னர் சாப்பிடக்கூடாது; போன்ற நம்பிக்கைகள் நிலவுகின்றன.
ஆனால் அறிவியல்படி இவையெல்லாம் தவறான கருத்துகள். கிரகணம் என்பது ஒரு வெளிப்படையான நிகழ்வு. நாம் பயன்படுத்தும் ஒரு குடை
அல்லது மரம் சூரியஒளியைத் தடுத்து நிழலை அளிப்பது போல, கிரகணத்தின் போது
சந்திரன் சூரியனை தடுப்பதால் அதன் நிழல்
பூமியில் விழுகிறது. எனவே, இது சூரியனில்
நடக்கும் நிகழ்வோ அல்லது அதை பாதிக்கும் ஒரு நிகழ்வோ அல்ல. எனவே கிரகணத்தின் போது
எந்த மர்ம கதிர்களும் சூரியனில் இருந்து வெளிப்படுவதில்லை. கிரகணம் ஏற்படாத
சாதரணகாலத்தில் சூரியனிடமிருந்து சக்தி வாய்ந்த ஒளியலைகள் வருகின்றன. அந்த நேரத்தில் வெளியே செல்லும் நாம்,
உணவு உண்ணும் நாம் கிரகணகாலத்தில் ஏன் வெளியில் செல்லக்கூடாது.
ராகு,
கேது எனும் பாம்புகளால் கிரகணம் ஏற்படுகின்றது என்ற ஓர் கருத்தும்
நம்மிடையே நிலவுகிறது. ராகு, கேது ஆகியோரின்
புராணக் கதைகள் இந்தியாவின் கலாச்சார
ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது. இருப்பினும், பண்டைய இந்திய வானியலாளர்களான ஆர்யபட்டா, லல்லாச்சார்யா, வராஹமிகிரா ஆகியோர் இந்த
புராண பிம்பங்களை மறுத்துள்ளனர்.
இந்திய
வானியல் ஆய்வை பொருத்தவரை, கிரகணங்களுக்கு முதன்முதலில் ஒரு அறிவியல் விளக்கத்தை முன்வைத்தவர் ஆர்யபட்டா.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆர்யபட்டியம் என்ற
தனது படைப்பில், ஒரு இடத்தில் சந்திரனின் நிழல் பூமியில் விழும் போது
சூரிய கிரகணம் ஏற்படுகிறது, மேலும் சந்திரன் பூமியின் நிழல் நுழையும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1300 ஆண்டுகளுக்கு முன்பு லல்லாச்சார்யாவால் எழுதப்பட்ட சிஷ்யாதிவ்ருத்த
தந்திரம் என்ற நூல் வானியல் மாணவர்களுக்கான கையேடாக உள்ளது. இந்நூல் ராகு, கேது புராணங்களையும் புராணக் கூற்றுகளையும்
தெளிவாக நிராகரிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் விஞ்ஞான
பாரம்பரியம் ஆர்யபட்டா மற்றும் லல்லாச்சார்யாவின் பகுத்தறிவு மற்றும்
தர்க்கரீதியான படைப்புகளில் வேரூன்றியுள்ளது.
சரி
இப்போது கிரகணத்தின் போது சாப்பிடுவது பற்றியும் வெளியே செல்வதும் பற்றி அறிவியல்
என்ன சொல்கிறது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி
கூற்றுக்கள் போல அல்லாமல், சமைத்த உணவு கெட்டுப்போவதில்லை, அல்லது வெளியே
சென்று கிரகணத்தைப் பார்ப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்று பல்வேறு ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இது வானத்தில் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்ச்சி. பாதுகாப்பாக இதனைப் பார்ப்பது
நம்முடைய அறிவியல் அறிவை வளர்க்கும்.