Tuesday, October 16, 2018


டெங்குக் காய்ச்சல்

                டெங்குக் காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு நோயாகும். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை நிற மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக காய்ச்சல், தோல் நிற மாற்றம், தலைவலி ஆகியவை எல்லா டெங்கு நோயாளிகளிடத்தும் காணப்படும் பொதுவான நோய் அறிகுறிகள். இதுபோக இரத்த கசிவுகளையும் இந்நோய் ஏற்படுத்தலாம்.

                கொசுக்களால் டெங்கு மட்டுமின்றி மலேரியா, யானைக்கால் நோய், சிக்கன்குனியா ஆகிய நோய்களும் பரவுகின்றன. அனொபிலிஸ் என்ற வகைக் கொசுக்களால் மலேரியா பரவுகிறது. க்யூலக்ஸ் என்ற வகைக் கொசுக்களால் யானைக்கால் வியாதி பரவுகிறது. 1990ஆம் ஆண்டு முதல் டெங்கு பெருவாரியாகப் பரவுகின்ற தொற்றுநோயாக மாறிவிட்டது. பொதுவாக நகரப்பகுதிகளில் உருவாகும் இந்நோய் தற்போது இதுவரை இந்நோய் வராத இடங்களான ஒடிசா, அருணாசலப்பிரதேசம், மிசோராம் ஆகிய இடங்களுக்கும் பரவியுள்ளது. முதன்முதலில் இந்தியாவில் இந்நோய் 1780இல் சென்னையில் உருவானதாக தகவல்கள் கூறுகின்றன.    

                இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகக் கடுமையாக பாதிக்கிறது. இந்த நோய், நான்கு வகையான நோய்க்கிருமிகளால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வகை டெங்கு வைரசால் பாதிக்கபட்டால்  அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். ஆனால் மற்ற வகை வைரசுகளுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது.

                இந்த நோய் கடுமையான முட்டு மற்றும் தசைகளைப் பாதிப்பதால் இதற்கு எலும்பை ஒடிக்கும் நோய் (BREAKBONE)  என்று பெயர். டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது டெங்கு நோய் வகைகளிலே மிக தீவிரமான தன்மை கொண்டது. இந்நோயால் உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம் வடிதல், பற்களின் ஈற்றில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி ஆகியவை வரலாம். மேலும் இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு அதிர்ச்சி நோய் (dengue shock syndrome) என்னும் வகைக்கு கொண்டு சென்று இறப்பினை ஏற்படுத்தக்கூடும்.



எப்படி பரவுகிறது?

                ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்தக் கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்துக்கொள்கிறது. பின்னர் அதனை மற்றவர்களுக்கும் பரப்புகிறது. இந்தக் கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். அநேகமாக மழைக் காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் செரட்டைகள், கார் டையர்கள் போன்றவற்றில் தேங்கும் நீரில்  இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. நோயாளிடம் இருந்து, கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.


டெங்கு அறிகுறிகள்

                கொசு கடித்து, நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும்.ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணைச் சுற்றி வலி, முதுகு வலி ஆகியவை வரும். பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் காய்ச்சல் வரும். காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை போகலாம். இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், வரலாம். கண்கள், சிவந்து போகலாம். தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்தக் காய்ச்சல் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாட்கள் வரை இருந்து, பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்த காலகட்டதில், உடல் வெப்பம் சாதரண நிலைக்கு வந்து, நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டத்தில் அநேகர் தாம் நோயிலிருந்து மீண்டுவிட்டோம் என்று சற்றே கவனக்குறைவாக இருந்து விடுவர். சில நாட்கள் கழித்து மீண்டும் காய்சல்  மற்றும் தோலில் நிறமாற்றம், முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.

டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?

                டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ,  மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யேக இரத்தச் சோதனை மூலம் இந்த நோயைக் கண்டறிவர்.

டெங்கு-சிகிச்சை முறை

                இதற்குத் தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பாராசிடமால், போதிய ஒய்வு,  நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை. மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரணிகள் எடுத்தல் தவறு. அதனால் நோய் முற்றி இரத்த இழப்பு அதிகமாகலாம். எனினும் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான டெங்கு தான் உயிரிழப்பில் போய் முடிவும்.

டெங்கு இரத்த கசிதல் ஜுரம்

     இந்த வகையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்த கசிவு, மற்றும் அதிர்ச்சி நோய் என்ற மோசமான உடல்நிலை உருவாகும. இந்த வகை டெங்கு நோய் தொடர்ந்தால் அதிகக் காய்ச்சல், தலைவலி வரும். இருமல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி வரலாம். இரண்டு முதல் ஆறு நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி புண் ஏற்பட்டு மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும். தோலில் இரத்த கசிவு, இரத்த வாந்தி, மலத்தில் இரத்தம் கலந்து கருப்பு மலம், பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இருதயம் பாதிக்கலாம்.

     இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்தக் குழாய் வழியாக நீர் ஏற்றுதல் ஆகும். இரத்தில் தட்டை அணுக்கள் (platelet) குறைவதாலேயே இரத்தக் கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவை பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்தத் தட்டை அணுக்களை இரத்தமாற்றம் மூலம் உடலில் செலுத்த வேண்டும்.  அதிர்ச்சி நோய் (dengue shock syndrome) வந்தால், அதற்காக பிளாஸ்மா அடங்கிய இரத்தம் செலுத்தப் பட வேண்டும்.

டெங்கு தடுக்கும் முறை

வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகளை கொசுவலைக்குள் நோய் குணமாகும்வரை வைக்க வேண்டும். இதனால் கொசு அவர்களைக் கடித்து நோய்க் கிருமிக்ளைப் பெறுவதைத் தடுக்கலாம்.
டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான ஏடிஸ் (aedes) கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசி எரியப்பட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவாரு பார்க்கவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.
வீட்டில் உபயோகபடுத்தாத கழிப்பிடங்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு.அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து, அவற்றை மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் பஞ்ச காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் நீரைக் காலி செய்து பாத்திரங்களைக் கழுவி வைக்க வேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனப்பெருக்கம் செய்து தனது வாழ்க்கை சுழற்சியை முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.
நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் காற்றுப்பதனி (AC), குளிர் பதனப்பெட்டி (FRIDGE) மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.
கொசு கடிக்காமல், கை கால்களை நன்றாக மூடி வைக்க முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் சட்டை அணிய வேண்டும். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப் படுத்தலாம். ஆனால் சிலருக்கு இது சுவாச ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
உடலில் தேய்க்கும் கொசு ஒழிப்பான் மருந்துகளை உபயோகபடுத்தலாம்.  
இந்த கொசு பகல் நேரத்தில் அதிலும் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும்.
அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்
நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.
சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதை தடுக்க முடிம்யும்.

     உலக டெங்கு எதிர்ப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு இந்தனேசியாவின் ஜகார்த்தா நகரில் முதன்முதலாக இத்தினத்தின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்கள் மத்தியில் டெங்கு பர்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்நாளின் முக்கிய குறிக்கோள். சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, யானைக்கால் வியாதி போன்றவற்றை வராமல் தடுக்கலாம். நோய்க்கிருமிகளை முற்றிலுமாக அழிக்க இயலாது. நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப் படுத்த இயலாது. டெங்குவிற்கு நோய் தீர்க்கும் மருந்துகளும் குறைவு. எனவே இந்நோய் வராமல் தடுக்க ஒரே வழி நோயைப் பரப்பும் காரணிகளான கொசுவை ஒழித்தலே ஆகும்.
படம் 1: 2017ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பு
படம் 2 : டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள்
படம் 3: டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசு

படம் 4: டெங்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்