காண்டாமிருகம்
காண்டாமிருகம் பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள
கிழக்கிந்தியக் காடுகளில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும். தமிழில் இதற்கு
மூக்குக்கொம்பன் என்று பெயர். ஒன்றரை முதல் ஐந்து செண்டிமீட்டர்
தடித்த தோலும் ஒன்று முதல் இரண்டு டன் எடையும் பருத்த உடலும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது. அதாவது மணிக்கு 40 கிமீ வேகத்தில் ஓடவல்லது. இது இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. ஏறத்தாழ 60 ஆண்டுகள்
வாழ வல்லது.
ஆபிரெஃக்ட் டியூரே (Albrecht
Dürer) என்ற ஜெர்மானிய, மறுமலர்ச்சிக் கால
ஓவியர் (1471-1527) காண்டாமிருகத்தின் படத்துக்கான மர அச்சு ஒன்றை 1515 இல்
செதுக்கினார் (படம் 4). புகழ்பெற்ற இந்த மரச் சிலையினை இவர் இவ் விலங்கைப்
பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும். சீனாவில் காண்டாமிருகங்கள்
இருந்ததற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. கிமு 206-கிபி 9ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த,
மேற்கு ஹான் வமிச அரசரிகள் பயன்படுத்திய, காண்டாமிருக வடிவில் அமைந்த ஓர் மதுக்கிண்ணம்
1963இல் சீனாவின் ஷான்சி நகரில் கண்டுபிடிக்கப்பட்டது (படம் 3). இந்த காண்டாமிருகம்
சுமத்ரா வகையினதாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்து களிமண் முத்திரை
ஒன்றான பசுபதி முத்திரையில் (படம் 1) யானை,
புலி, காண்டாமிருகம், எருமை மாடு ஆகிய மிருகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிபி 415ஆம்
ஆண்டைச் சேர்ந்த குப்த வமிச அரசர் முதலாம் குமாரகுப்தர் வெளியிட்டுள்ள தங்க நாணயமொன்றில்
(படம் 2) காண்டாமிருகம் வேட்டையாடப்படும் காட்சி சித்தரிக்கப்படுகிறது.
மலேசியா இந்தியா போன்ற
நாடுகளில் காண்டாமிருகம் நெருப்பைக் கண்டால் அதை அணைத்துவிட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது. ஆயினும் இது சம்பந்தமாக அண்மைத் தகவல்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. பிரபல
ஆங்கிலத் திரைப்படமான காட்ஸ் மஸ்ட் பி க்ரேசி (Gods Must be crazy) எனும் திரைப்படத்திலும்
இவ்வாறு காண்டாமிருகம் நெருப்பை அணைப்பது போன்ற காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காண்டாமிருகத்திற்கு மூக்குக்கொம்பன்,
காண்டாவிருகம், உச்சிக்கொம்பன், கொந்தளம் என்னும் பெயர்களும் உண்டு. காண்டா என்னும் சொல் மிகப்பெரிய
என்னும் பொருள் கொண்டது எனவே இதனை காண்டாமிருகம் என்று பலரும் அழைக்கின்றனர்.
எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லது, ஆகவே
இதற்கு கொந்தளம் என்றும் பெயர்.
காண்டாமிருகம் இயற்கைச்
சூழலில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், சாவா
சுமத்ரா தீவுகளில் மட்டுமே இன்று வாழ்கின்றன. ஆப்பிரிக்க காண்டாமிருகங்களுக்கு
இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய காண்டாமிருகங்களில் இந்திய, சாவா
வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா காண்டாமிருகங்களும்
இரட்டைக் கொம்புகள் கொண்டவை. ஆப்பிரிக்க காண்டாமிருகத்தினை சுவாகிலி மொழியில் கிஃவாரு
(Kifaru) என்று அழைக்கின்றனர். கறுப்பு
ரைனோ (black rhino) என்று
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க
விலங்கைக் குறிக்கும்.
காண்டாமிருகங்கள் ஒற்றைப்படை கால் விரல்கள் கொண்ட விலங்குகள் வகையை சேர்ந்தவை. இவற்றின்
கால்களில் மூன்று விரல்கள் உள்ளன. (படம் 5) இன்று உயிர்வாழும்
மொத்தம் ஐந்து வகையான காண்டாமிருகங்களை மூன்று பிரிவாக
பிரிக்கலாம். முதல் பிரிவில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளை, கறுப்பு காண்டாமிருகங்கள் ஆகியன அடங்கும். இவை 5
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும்
ஊழிக்காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான
வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பே ஆகும். வெள்ளை காண்டாமிருகத்திற்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளன. ஆனால் கறுப்பு காண்டாமிருகத்தின்
வாய் சற்று குவிந்து கூராக இருக்கும்.
வெள்ளை என்னும் அடைமொழி ஆப்பிரிக்க
மொழியில் பரந்து/விரிந்த (wide) என்னும் பொருள் கொண்ட சொல்லாகும். இச்சொல்
சொல் மருவி white (வெள்ளை)
என்று வழங்கப்படலாயிற்று. இவ்வகை காண்டாமிருகங்கள் சாம்பல்/வெளிர் பழுப்பு நிறமுடையனவே. வெள்ளை நிறமுடையன
அல்ல. மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்ட இரண்டு வகைகளும்
ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவை.
மீதி உள்ள மூன்றில், இந்திய காண்டாமிருகமும் சாவாத் தீவு காண்டாமிருகமும் ஒற்றை கொம்புள்ள ஆசிய
வகை விலங்குகள். இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய காண்டாமிருகமும் சாவா காண்டாமிருகமும் ஏறத்தாழ 10
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன. அனைத்து காண்டாமிருகங்களைக் காட்டிலும் மிகச் சிறியதான
சுமத்ரா காண்டாமிருகம் மூன்றாவது வகையைச் சேர்ந்தது. இந்த சுமத்ரா வகைக்கு, ஆப்பிரிக்க
இனத்தினைப்
போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளிலும் வாழ வல்லதாகையால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி
கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தருவாயில் இருக்கும் சுமத்ரா காண்டாமிருகம் மொத்தம் 275 தான் உலகில் உள்ளன என்று கணக்கிட்டுள்ளார்கள். எல்லா காண்டாமிருக
வகையினங்களும்
அழிவுறும் தீவாய்ப்புடன் உள்ளன. இந்திய காண்டாமிருகங்கள் ஏறத்தாழ 2700 மட்டுமே
இன்றுள்ளன. அதே போல ஆப்பிரிக்க "வெள்ளை" காண்டாமிருகமும்
9000 தான் இன்றுள்ளன.
காண்டாமிருகத்தின் உடல் பருமனை
ஒப்பிடும் பொழுது இதன் மூளையின் எடை மிகச்சிறியது. பாலூட்டிகளிலேயே இதற்குத்தான்
மூளையின் எடை மிகச்சிறியது என்று கருதுகிறார்கள். இதன் மூளையின் எடை
ஏறத்தாழ 400–600 கிராம் ஆகும். காண்டாமிருகங்கள் தாவர உணவை
உண்பவை. பெரும்பாலும் இலை தழைகளையே உண்ணுகின்றன. ஆப்பிரிக்க
காண்டாமிருகத்துக்கு முன்னம் பற்கள் கிடையாது, ஆகவே
முன்கடைவாய்ப் பற்களைக் கொண்டே மெல்லுகின்றன. இவற்றின் கொம்பு சிறு
புதர்களை வேரோடு பிடுங்கி எறிய உதவுகின்றது. இந்த கொம்புப் பகுதி நகமியம்
(கெரட்டின்) என்னும் பொருளால் ஆனது. நகம், மயிர் போன்ற
பகுதிகளும் இதே பொருளால் ஆனதே.
கறுப்பு காண்டாமிருகத்தைத் தவிர மற்ற எல்லா காண்டாமிருகங்ளுக்கும் 82
நிறப்புரிகள் (நிறமிகள், குரோமோசோம்கள்) உள்ளன, ஆனால் கறுப்புக் காண்டாமிருகத்துக்கு மட்டும் 84 நிறமிகள்
உள்ளன. பாலூட்டிகளிலேயே இதுவே யாவற்றினும் அதிக எண்ணிக்கை உடையதாகும்.
உயரின வகைப்பாடும்
பெயரும்
காண்டாமிருகத்தினை ஆங்கிலத்தில் ரைனோசெரசு "rhinoceros" என்று
அழைக்கின்றனர். இச்சொல்லின் மூலம் கிரேக்க மொழியிலிருந்து
வந்தது. கிரேக்க மொழியில் காண்டாமிருகத்தினைக் குறிப்பிடும் சொல்லின்
ஒரு பாதிக்கு மூக்கு என்றும் மறு பாதிக்கு கொம்பு என்றும் பொருளாகும். எனவே மூக்குக்கொம்பன் என்று பொருள்படும் ரைனோகெரசு என்பது ஆங்கிலத்தில்
வழங்குகின்றது. ஆங்கிலத்தில் இச்சொல்லின் பன்மைச்சொல் வடிவம் ரைனோசெர்ட்டி என்பதாகும்.
வெள்ளை
மூக்குக்கொம்பன்
யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை
மூக்குக்கொம்பனும், இந்திய காண்டாமிருகமும், நீர்யானையும் உலகிலேயே
எடை மிகுந்த தரை விலங்குகள். வெள்ளை மூக்குக்கொம்பனில் இரண்டு உள் இனங்கள் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium
simum simum) வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள்
உள்ளன. மிக இக்கட்டான அளவு அருகிவிட்ட வட வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium
simum cottoni) சூன் 2008 எடுத்த
கணக்குப்படி மொத்தம் நான்குதான் உலகில் உள்ளன.
வெள்ளை காண்டாமிருகம் பெரிய
உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும்
விலங்கு. இதன் எடை 3000 கிலோ கிராமினைத் தாண்டக்கூடியது. 4,500 கிலோ கிராம் எடையுடைய விலங்கும் வரலாற்றில்
பதிவாகி உள்ளது. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ
இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும்
சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய
பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை.
வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக
இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.
கறுப்பு
காண்டாமிருகம்
கறுப்பு காண்டாமிருகம் நிறத்தால்
வெள்ளை காண்டாமிருகத்தை ஒத்ததே. கறுப்பு காண்டாமிருகங்களில் (Diceros bicornis) நான்கு உட்பிரிவுகள் உள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளில் இவை வாழ்வதால்,
அதன் அடிப்படையில் இவை பிரிக்கப்பட்டுள்ளன. (1) தெற்கு-நடுப்பகுதி
உள்ளினம் (Diceros bicornis minor) - இவ்வகை அதிக எண்ணிக்கையில் நடு தான்சானியாவில் இருந்து
தெற்கே சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக் முதல் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கிழக்கு
பகுதிகளின் காணப்படிகின்றன, (2) தெற்கு-மேற்கு
உள்ளினினம் (Diceros bicornis bicornis) -இவை நமீபியா, தென்
அங்கோலா, மேற்கு போட்சுவானா, தென் ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள
வறண்ட அல்லது சிறிது வறண்ட சவான்னா (புல்வெளி) பகுதிகளில் காணப்படுகின்றன; (3) கிழக்கு
ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros bicornis michaeli) இவை பெரும்பாலும்
தான்சானியாவில் காணப்படுகின்றன; (4) மேற்கு ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros
bicornis longipes) - இவ்வகை ஏறாத்தாழ அற்றுவிட்டதாக தற்காலிகமாக 2006இல்
அறிவிக்கபட்டுள்ளது. வெறும் 8 விலங்குகள் மட்டும்
தனி வளர்ப்பில் உள்ளன.
வளர்ந்த கறுப்பு காண்டாமிருகம்
அதன் தோள்பட்டைவரை 147–160 செண்டி மீட்டர் உயரம் இருக்கும். இதன் நீளம் 3.3-3.6 மீட்டர் இருக்கும். முழு வளர்ச்சி அடைந்த விலங்கு 800 முதல் 1400 கிலோ
கிராம் எடை இருக்கும், விதிவிலக்காக சில 1820 கிலோ கிராம் வரையிலும் காணப்படும், பெண்
விலங்குகள் ஆணைவிட எடை குறைவாக இருக்கும். இரண்டு மூக்குக்கொம்புகளும் கெரட்டின்
அல்லது நகமியம் என்னும் பொருளால் ஆனது. இரண்டு கொம்புகளில் பெரியதாக உள்ளது
மூக்கின் நுனிப்பகுதியில் இருக்கும். இவை பொதுவாக 50 செண்டி மீட்டர் நீளம் கொண்டதாக இரூக்கும். கறுப்பு காண்டாமிருகம்
வெள்ளை காண்டாமிருகத்தினை விட சிறியதாக இருக்கும். கறுப்பு காண்டாமிருகத்தின் வாயின் முன் பகுதி சற்று குவிந்து கூர்மையாக இருக்கும். இது இலைகளையும்
கொப்புகளையும் பற்றி உண்ணுவதற்கு உதவியாக இருக்கும் படி உள்ளது.
இந்திய காண்டாமிருகம்
இந்திய காண்டாமிருகம் அல்லது
இந்திய மூக்குக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின்
சில பகுதிகளிலும் காணப்படுகின்றது. இது இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள்
மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் (savannah forests) வாழ்கின்றது.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த இவ்வகை விலங்கு இந்திய காண்டாமிருகமே
ஆகும். தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில்
மிகப்பெரிய இரண்டு வகைகளில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின்
தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ
சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால்
பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே
வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
நன்கு வளர்ந்த ஆண் காண்டாமிருகம்
பெண்ணை விடக்
கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ
வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிக அளவாக 3500 கிலோ
எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் உள்ளன. கன்றுகள் பிறந்து ஆறு
ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த
விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.
இந்தியக் காண்டாமிருகம் மணிக்கு 40 கி.மீ விரைவில் ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த
விலங்கு மிகக் கூர்மையான மோப்பத் திறனும் கேட்கும் திறனைப் கொண்டது, ஆனால்
இதன் பார்வைத் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக்
கொண்டது. இருப்பினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம்
செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும்.
இவ்விலங்கு புல், இலை, பழங்கள்
மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை, மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்முகட்டையை
வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக்
கொண்டதாகும்.
காண்டா மிருகங்கள் மிகவும்
பலசாலிகள் இவற்றின் குட்டையான கால்களில் முன்று விரல்கள் உண்டு. அகன்ற தோல் இவற்றை
இணைத்திருக்கும். தோளின் முன்புறமும் பின்கால்களின் முன்பும் தடித்த தோல் மூன்று
மடிப்புகளாகக் கவசம் போல் அமைந்திருக்கும். இதனை துப்பாக்கிக் குண்டு கூடத்
துளைக்க முடியாது என்பது தவறு. உயிரோடிருக்கும் போது இத்தோல் மிருதுவாகத்தான்
உள்ளது. காண்டாமிருகம் இறந்துவிட்டால் தோல் உயர்ந்து குண்டு துளைக்க முடியாதபடி
உறுதியாகிவிடும்.
மூக்கிலிருந்து
வளர்ந்திருக்கும் கொம்பு தோலிலிருந்து வளர்கிறது. இது எதிரிகளைத் தாக்க அல்ல.
கிழங்குகளைத் தோண்டவே. எதிரிகளைப் பற்களாலேயே கடிக்கும். யானைகளைக் கூடக்
கொன்றுவிடக் கூடிய பலம் படைத்த இவை வெகு வேகமாக ஓடும். கேட்கும் சக்தி அதிகம், பார்க்கும்
சக்தி குறைவு. பிராணிகளைக் கொன்ற போதிலும் புசிப்பது இல்லை. புல் பூண்டு, கிழங்குகளையே
சாப்பிடும். தனித்து வாழ்வதையே விரும்பும் இது. சேற்றில் விழுந்து புரள்வதென்றால்
கொண்டாட்டம். இரவில்தான் இரைதேடும். தடவைக்கு ஒரு குட்டி போடும். அதற்குக் கோபம்
வந்தால் உடலெல்லாம் இரத்தம் போல் சிவப்பாக வியர்த்துக் கொட்டும். மூர்க்கத்தனமான
இம்மிருகம் கண்ட இடத்தில் மலம் கழித்து அசுத்தப்படுத்துவது இல்லை. எப்போதும்
குறிப்பிட்ட ஒரு இடத்திலேயே மலம் கழிக்கும். புல், அடர்ந்து
காடுகளில்தான் இவை வசிக்கும்.