தஞ்சை வளநாட்டைத் தாயெனவே காத்தருளும்
தனிக்கருணை காவிரி
நாகை, தஞ்சை, திருவாருர் மாவட்டங்கள் தமிழ்நாட்டின்
நெற்கிடங்குகளாகக் கருதப்படுகின்றன. கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு,
நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய திருவாரூர்
மாவட்ட ஆறுகளும் உப்பனாறு, அரசலாறு, திருமலைராயனாறு ஆகிய நாகை மாவட்ட ஆறுகளும் வெண்ணாறு,
குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய். ஆகிய தஞ்சை
மாவட்ட ஆறுகளும் தமிழகத்தின் இப்பகுதிகளை நீர்வளம் தந்து நெற்கழனி ஆக்குகின்றன. இவ்வாறுகள்
அனைத்தும் காவிரியாற்றின் கிளைநதிகளாகும்.
வேளாமைக்குப் பயன்படும் இவ்வாறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு
நிலங்களில் அலையாத்தி காடுகளும் வளர்கின்றன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்
ஆறு கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உப்பங்கழி அல்லது
கடற்கரைக்காயல் ஆகும்.
காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப் பகுதியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் தோன்றுகிறது.
அங்கிருந்து முதலில் தெற்கு நோக்கிப் பாய்ந்து, பின்னர் கிழக்கு நோக்கிப் பயணித்து
நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடிக்கு சற்று
வடக்கே பூம்புகார் அல்லது காவிரிபூம்பட்டினம்
என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.
காவிரி நதியால் ஏறத்தாழ 81,000 சதுர கிலோமீட்டர்
பரப்பளவு நிலப்பகுதி பாசன வசதி பெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் 34,000 சதுர கிலோமீட்டரும்,
தமிழகத்தில் 44,000 சதுர கிலோமீட்டரும், கேரள்த்தில் 3,000 சதுர கிலோமீட்டரும் புதுச்சேரி
யூனியன் பிரதேசத்தில் 160 சதுர கிலோமீட்டரும் காவிரி நதியாலும் அதன் கிளைநதிகளாலும்
பாசன வசதி பெறுபவை. கர்நாடக மாநிலத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி ஏறத்தாழ
800 கிலோ மீட்டர் பயணித்து, வளமான டெல்டாப் பகுதியை உருவாக்கி காவிரி கடலிலே கலக்கின்றது.
இடையிலே ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. குறிப்பாக கர்நாடக மாநிலம், மைசூருக்கு அருகில்
உள்ள சிவசமுத்திரம் மற்றும் தமிழகத்தில்
உள்ள ஹோகனேக்கல் நீர்வீழ்ச்சிகள். சிவசமுத்திரத்திலும்
மேட்டூரிலும் அமைந்துள்ள நீர்மின் நிலையங்களிலிருந்து தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு
நீர்மின்சாரமும் கிடைக்கிறது.
புராணக்
கதைகள்
இந்து மதப் புராணங்களில் காவிரி நதியைப் பற்றி
ஏராளமான கதைகள் உள்ளன. படைப்புக் கடவுளான நான்முகன், அகத்திய முனிவர், கவேர முனிவர்
ஆகியோரைத் தொடர்புபடுத்தி கூறப்படும் கதைகள் பல உள்ளன. தலைக்காவிரிப் பகுதியில் தோன்றுகின்ற
நதி பூமிக்குக் கீழாக சில கிலோ மீட்டர்கள் பயணித்து மீண்டும் கர்நாடகா மாநிலத்தின்
பாகமண்டலா பகுதியில் வெளிவருகிறது. இதனை
விளக்கும் வகையிலும் ஓர் புராணக் கதை உள்ளது.
நதியின்
போக்கு
தலைக்காவிரியின் இயற்கைச் சூழல் நாம் ஒவ்வொருவரும்
கண்டு இன்புறத்தக்கது. மலைகள், குன்றுகள், குகைகள், அடர்ந்த புதர்கள், உயர்ந்த மரங்கள்
நிறைந்த காடுகள் கொண்ட பகுதி இது. இங்கே 9 சதுர மீட்டர் பரப்பளவில் குளம் ஒன்றை வெட்டி,
அதில் எப்பொழுதும் 75 செண்டி மீட்டர் ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி இருக்கும்படி அமைத்து,
காவிரித்தாய்க்கு கோவிலொன்றும் அமைத்துள்ளனர். காவிரி இக்குண்டத்திலிருந்து புறப்பட்டு
பின்னர் குழிகளில் விழுந்து, புதர்களுக்குள் மறைந்துவிடுகிறது. கண்ணுக்குத் தெரியாமல்
புதர்களுக்குள்ளும் குன்று இடுக்குகளுக்குள்ளும் புகுந்து ஓடுவதால் காவிரி நதி இப்பகுதியில்
அந்தர்வாஹினி என்றழைக்கப்படுகிறது. பின்னர்
மலைச்சரிவில் வெளிப்பட்டு வளைந்து நெளிந்து பாய்ந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
பாகமண்டலா என்னும் இடத்தில்தான் நதியாக
உருமாறி ஓடுகிறது.
குடகு மலைப் பகுதியைவிட்டு புறப்படுகின்ற காவிரி
நதி தக்காண பீடபூமியில் பயணிக்கையில் தன் பாதையில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பெரிய
தீவுகளை உருவாக்கியுள்ளது. முதலாவது ஸ்ரீரங்கப்பட்டினம்.
இரண்டாவது சிவசமுத்திரம். இவற்றைத் தவிர
நிசார்கதாமா என்ற ஓர் சிறிய தீவும் உள்ளது.
சிவசமுத்திரத்தில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இங்கே நதி 320 அடிகள் உயர நீர்வீழ்ச்சியை
உருவாக்கியுள்ளது. ககன(ச்)சுக்கி மற்றும்
பாற(ச்)சுக்கி ஆகியவை இந்த நீர்வீழ்ச்சிகளாகும்.
சிவசமுத்திரத்தில் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் 1902இல் அமைக்கப்பட்டது. இங்கிருந்து
பெறப்படும் மின்சாரம் பெங்களூரு நகருக்கு அளிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி பாயும் பாதையில்
12 அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு மூன்று கிலோமீட்டர்
தொலைவில் ரங்கந்திட்டு என அழைக்கப்படும்
பறவைகள் சரணாலயம் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அருகில் காவிரி நதியின் உள்ளேயே
17ஆம் நூற்றாண்டில் ரணதீர காண்டீரவா என்ற
உடையார் வம்ச அரசரால் ஒரு கால்வாய் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நதியினுள்ளே அமைக்கப்பட்டுள்ள
கால்வாய் இது மட்டுமே எனச் சில தகவல்கள் கூறுகின்றன.
ஹேரங்கி, ஹேமாவதி, லக்ஷமணதீர்த்தம்,
கபினி, ஷிம்ஷா, அக்ராவதி, ஹொன்னஹோலே அல்லது ஸ்வர்ணமுகி, லோகபவானி ஆகியன
கர்நாடக மாநிலத்தில் காவிரியில் இணையும் துணைநதிகளாகும். ஹேரங்கி நதியானது
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புஷ்பகிரி மலையில் உற்பத்தியாகி, 50 கிலோ
மீட்டர் தூரம் பயணித்து குடிகெ என்னும் இடத்தில் காவிரியுடன்
இணைகிறது. ஹேமாவதியாறு கர்நாடக
மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில், பல்ல ராயண துர்கம் என்ற
இடத்தில் உருவாகி, 245 கிலோ மீட்டர் ஓடி, கிருஷ்ணராஜசாகர் அணை அருகில் காவிரியுடன்
இணைகிறது. கிருஷ்ணராஜசாகர் அணை அருகில் காவிரியுடன் இணையும் மற்றொரு நதி லக்ஷமணதீர்த்தமாகும்.
குடகு மாவட்டத்தில் பிரம்மகிரி மலைப்பகுதியில் உருவாகி, இருப்பூர்
என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக விழுந்து, பின்னர் காவிரியோடு கலக்கிறது. நாகர்ஹோலெ
தேசிய வனவிலங்குப் பூங்கா இந்நதிக்கரையில் அமைந்துள்ளது.
கபினி அல்லது கபிலா ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு
மாவட்டத்தில்
தொடங்கி
கிழக்கு
நோக்கி
ஓடும்
இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர்
என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து பின் வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது. மக்கியாடு,
பெரியா, மனந்தவாடி, பனைமரம், காளிந்தி, நுகு ஆகிய சிற்றாறுகள் இதனுடன் இணைகின்றன. கபினியாறு மற்றும் அதன்
துணையாறுகளின் மேல் அணைகள் பல கட்டப்பட்டுள்ளன. பேச்சனஹல்லி அணை, பனசுரா சாகர் அணை, நுகு ஆற்றின் மேலணை ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. கபினியாறும் அதன் துணையாறுகளும்
மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலையும், அங்குள்ள காடுகளில் வாழும் விலங்குகளையும்
பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
காவிரியின்
மற்றொரு துணை நதியான ஷிம்ஷா கர்நாடகாவில் உள்ள தும்கூர் மாவட்டத்தில் தேவனாராயணதுர்கா
என்ற இடத்தில் உருவாகி, 221 கிலோ மீட்டர் ஓடி, சாமராஜநகர் என்ற இடத்தில் காவிரியோடு இணைகிறது. சிக்கஹோலே, ஹெப்பல்லா, கனிஹல்லா, கனவா, முலாஹல்லா வீரவைஷ்ணவி ஆகியவை ஷிம்ஷா
நதியின் துணை நதிகளாகும். இந்நதி 2013ஆம் ஆண்டிற்கு முன்னால் மூன்றாண்டுகளுக்கு மேல்
வறண்டு கிடந்தது. 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழை காரணமாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியது. காவிரி நதியில் இணையும் மேலுமொரு துணைநதி அக்ராவதி ஆகும். நந்தி மலையில் உருவாகும் இந்நதி, தன் துணைநதிகளான
குமுதவதி, சுவர்ணமுகி, வ்ருஷபாவதி ஆகிய
நதிகளோடு இணைந்து கர்நாடகா மாநிலத்தின் கனகபுரா நகரருகே சங்கமம் என்ற இடத்தில் காவிரியோடு
இணைகிறது. இவ்வாறு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவிற்கு குடிநீர் தரும் ஆறாகும்.
தற்போது இந்நதி மிகவும் மாசடைந்த நிலையில் உள்ளது,
கர்நாடக
மாநிலத்தில் பாயும் காவிரியின் மற்றொமொரு துணைநதி சுவர்ணவதி ஆகும். இந்நதி ஹொன்னஹோலே என்றும் அழைக்கப்படுகிறது. 88
கிலோ மீட்டர் ஓடும் இந்நதி மைசூரருகே நாசுரகாட்
மலையில் உற்பத்தியாகிறது. மாண்டியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் லோகபவானி என
அழைக்கப்படும் மற்றுமொரு துணைநதி ஸ்ரீரங்கப்பட்டினமருகில் காவிரியோடு கலக்கிறது.
கர்நாடக
மாநிலத்தில் பாயும் காவிரியும் அதன் துணைநதிகளும், கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி
கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து காவிரியுடன் கலக்கும் கபினியும் தென்மேற்குப்
பருவமழைக்க் காலத்திலும், அதற்கு முன்னர் மே மாத்திலும், பின்னர் வடகிழக்குப்
பருவமழைக் காலத்திலும் மழைபெறுகின்ற பகுதிகளாகும். இக்காலங்களில் மழை சரிவரப்
பெய்யாவிட்டால் மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர்வரத்து குறைகிறது. இதனால்
தமிழகத்தின் டெல்டாப் பகுதிகளில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது.