Tuesday, April 12, 2016

வானிலை, காலநிலை மற்றும் எல்நினோ

வானிலை, காலநிலை மற்றும் எல்நினோ

                                    

     சென்னையில் பெய்த கனமழை வானிலை பற்றியதோர் புதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாண்டு பெய்த கனமழையோடு தொடர்புபடுத்தி எல்-நினோ, உலகளாவிய காற்றோட்டங்கள், கடல் நீரோட்டங்கள் பற்றி ஊடகங்கள் செய்திக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. எனவே இவை அனைத்தும் பற்றிய அறிவியல் செய்திகளை தெளிவாக அறிவது நன்மை பயக்கும் அல்லவா !

     சென்னையில் பெய்த கனமழைக்குக் காரணம் எல்-நினோ புயல்தான் என்று ஒரு செய்தி ஊடகங்களில் சொல்லப்பட்டது. இச்செய்தி பத்து விழுக்காடு சரி, தொண்ணூறு விழுக்காடு தவறு. எல்-நினோ நீண்ட கால வானிலை அல்லது காலநிலை பற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்க மட்டுமே பயன்படும். இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் முன்னர் வானிலை மற்றும் காலநிலை பற்றிப் பார்க்கலாம்.

     வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பநிலை, திசைவேகம், வானில் உலவும் மேகங்களின் அளவு, அமைப்பு, மழை, பனி பெய்கிறதா ஆகிய தகவல்களின் தொகுப்பாகும். அதாவது சென்னையில் இன்று காலை எட்டு மணிக்கு எடுக்கப்பட்ட வானிலைத்தரவுகளின் தொகுப்பு வானிலையாகும். காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வானிலைத் தரவுகளின் சராசரியாகும்.

     உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் வானிலை முன்னறிவிப்புப் பணியையும், காலநிலை முன்னறிவிப்புப் பணியினையும் செய்கின்றன. நம் நாட்டிலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை இப்பணிகளைச் செய்துவருகின்றது. வானிலை முன்னெச்சரிக்கைகள் பல வகைப்பட்டன. அவற்றை அட்டவணை 1இல் காண்க. எனவே வானிலை முன்னெச்சரிக்கை என்பது குறுகிய காலத்தியது, காலநிலை முன்னெச்சரிக்கை என்பது மிக மிக நீண்ட காலத்தியது என நாம் அறிந்து கொள்ளலாம். வானிலை எச்சரிக்கைகளே பெரும்பாலான நேரங்களில் தவறாகப் போவதாக மக்கள் நினைக்கின்றனர். அப்படியிருக்க 20 ஆண்டுகளுக்குப் பின்னர் வரக்கூடிய காலநிலை முன்னறிவிப்பு எப்படி சரியாக இருக்கமுடியும் என்ற வினா எழுகின்றது.

அட்டவணை 1: வானிலை முன்னெச்சரிக்கைகளின் வகைகள்
வானிலை முன்னெச்சரிக்கையின் பெயர்
செல்லத்தக்க காலம்
ஆங்கிலத்தில்
தமிழில்

Nowcast or veryshort range forecast
மிகக் குறுகிய கால வானிலை முன்னெச்சரிக்கை
6 மணி நேரம்
Short range forecast
குறுகிய கால வானிலை முன்னெச்சரிக்கை
மூன்று நாட்கள்
Medium range forecast
மத்திய கால அளவிலான வானிலை முன்னெச்சரிக்கை
மூன்று முதல் பத்து நாட்கள் வரை
Long range forecast
நீண்ட கால வானிலை முன்னெச்சரிக்கை
 30 நாட்களுக்கு மேல், அல்லது ஒரு பருவகாலம் முழுமைக்கும்
Climate forecast
காலநிலை முன்னெச்சரிக்கை
பத்தாண்டுகளுக்குப் பின்னர்


     வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பிற்கான வேறுபாடு வாழைப்பழத்திற்கும் மாம்பழத்திற்கும் உள்ள வேறுபாட்டினைப் போன்றது. வானிலை மற்றும் காலநிலை இரண்டுமே கணினி வழி முறைகளால் பெறப்படுகின்றன. இக்கணினிவழி முறைகள் ஆங்கிலத்தில் ”மாடல்ஸ் – மாடலிங்” (models-modelling) என்றழைக்கப்படுகின்றன. வானிலை முன்னறிவிப்பிற்கான மாடல்கள் தங்களுக்கு அளிக்கப்படும் முதல் அடிப்படை வானிலைத் தரவுகள் சரியானதாகவும் சீரான இடைவெளியில் அமைந்துள்ள புள்ளிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பணிபுரிகிறது. இத்தரவுகள் சரியில்லை எனில் நாம் பெறுகின்ற வானிலை முன்னெச்சரிக்கைகள் தவறாகப் போய்விடும். இதனை தொடக்க விழுமியச் சிக்கல் (Intial Value problem), எல்லை விழுமியச் சிக்கல் (Boundary value problem) என அழைப்பார்கள். வானிலை முன்னறிவிப்பில் சிறிய இடிமுகிலின் தோற்றம் கூட மாடலில் சேர்க்கப்பட வேண்டும். காலநிலை முன்னறிவிப்பில் இது தேவையில்லை. இங்கே சூரியனின் வெப்பவெளியீடு, எரிமலை வெடிப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

     வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் உலகளாவிய காற்றோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக உலகில் நிலநடுக்கோட்டுப் பகுதிகள் சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தைப் பெறுகின்றன. இப்பகுதிகள் பெரும்பாலும் கடற்பகுதிகளாக இருப்பதினால் ஏறத்தாழ தினந்தோறும் மாலை நேரத்தில் வெப்பந்தூக்கி மழை பெய்கிறது. இம்மழையப் பெய்விக்கும் இடிமுகில்களால் காற்று மேலெழும்பி, வளிமண்டலத்தில் வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் நகர்ந்து 30 டிகிரி வட, தென் அட்சரேகைப் பகுதிகளில் கீழிறங்குகிறது. பின்னர் தரை வழியே நிலநடுக்கோட்டை நோக்கி நகர்கிறது. இந்தச் சுழற்சி ஹாட்லி சுழற்சி என்ப்படும். (காண்க படம் 1) தரை மட்டத்திலும் வளிமண்டலத்தின் மேலடுக்குகளிலும் காணப்படும் காற்றோட்டத்தை உலகின் பொதுவான காற்றோட்டம் (General Circulation) என அழைக்கிறோம் (படம் 2).

hadley_cell2

general circulation


உலக நாடுகளின் புவியியல் அமைப்பிற்கேற்ப இந்த பொதுவான காற்றோட்டத்தில் சில மாறுதல்கள் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் புவியியல் அமைப்பு காரணமாக தென்மேற்குப் பருவமழை ஏற்படுகிறது. இப்பருவ மழை பூமிப்பந்தின் வட கோளத்தில் கோடை காலம் நிலவும்போது ஏற்படுகிறது. ஆசியக் கண்டத்தின் பல நாடுகளில் இத்தகைய பருவமழைக்காலம் உள்ளது என்றாலும் இந்தியாவில் மட்டுமே இப்பருவ மழை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

     நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் அமந்துள்ள பசுபிக் பெருங்கடற் பகுதிகள் சில ஆண்டுகளில் இயல்புக்கு மாறாக உயர் வெப்பநிலையைப் பெற்கிறது. இந்நிலையையே எல்-நினோ என அழைக்கிறோம். நான்கைந்து மாதங்கள் நீடிக்கும் இந்நிலை பொதுவான காற்றோட்டத்தை மாற்றுகிறது. இதனால் உலகின் பொதுவான காலநிலை பாதிப்படைகிறது. இந்த வகையில் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழைக் காலங்களின் பெய்யக்கூடிய மழையின் அளவு எல்நினோவால் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். மற்றபடி ஒரு நாளில் பெய்கின்ற கனமழைக்கு (2005இல் மும்பையில் பெய்த மழை போன்றோ அல்லது சென்னையில் 2015இல் பெய்த மழை போன்ற கனமழைக்கு) எல்நினோவை நேரடிக் காரணமாகச் சொல்லமுடியாது.